2017-08-24 15:17:00

கர்தினால் பரோலின், இரஷ்ய அரசுத்தலைவர் சந்திப்பு


ஆக.24,2017. கடந்த நான்கு நாட்களாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இரஷ்ய நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை, இப்புதன் மாலை சந்தித்துப் பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், சுமுகமானச் சூழலும், மனம் திறந்த உரையாடலும் இடம்பெற்றன என்று திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் கிரெக் பர்க்  அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையிலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிலும் உயிர்நாடியாக விளங்கும் மனிதாபிமானம், இரஷ்ய நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் தூதரக உறவுகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றது என்று அரசுத்தலைவர் புடின் அவர்கள் இச்சந்திப்பில் கூறினார்.

சமாதானத்தின் அடையாளமாக, வெண்கலத்தில் செய்யப்பட்ட ஒலிவ மரக்கிளை ஒன்றை, கர்தினால் பரோலின் அவர்கள் அரசுத்தலைவர் புடின் அவர்களுக்கு அளித்தார் என்றும், 2014ம் ஆண்டு இரஷ்ய நாட்டின் சோச்சியில் (Sochi) நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நாணயங்கள் அடங்கிய தொகுப்பினை, புடின் அவர்கள் கர்தினால் பரோலின் அவர்களுக்கு வழங்கினார் என்றும் வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்யாவில் மேற்கொண்ட 4 நாள் பயணத்தை நிறைவு செய்து, ஆகஸ்ட் 24,  இவ்வியாழன், உரோம் நகருக்குத் திரும்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.