2017-08-25 15:03:00

பாலஸ்தீனாவில், இஸ்ரேல் இராணுவத்தால் புதிய பள்ளி அழிப்பு


ஆக.25,2017. புனித பூமியின் பெத்லகேம் நகரின் புறநகர்ப் பகுதியில், நான்கு பாலஸ்தீன கிராமங்களுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி ஒன்றை, இஸ்ரேல் இராணுவம்  அழித்துள்ளது.

Jubbet al-Dhib பகுதியில், முதல் முறையாக கட்டப்பட்டுள்ள பள்ளியை, இப்புதன் காலையில் ஆடம்பரமாகத் திறப்பதற்காக, தயாரிப்புகள் இடம்பெற்றவேளை,  இச்செவ்வாய் இரவு, இஸ்ரேல் படைவீரர்கள், இராணுவ வாகனங்களைக் கொண்டு அப்பள்ளியை இடித்துவிட்டனர் என்று, செய்திகள் கூறுகின்றன. 

அப்பகுதியில் அமைக்கப்படவிருந்த இந்த ஒரே பள்ளியை இடிப்பதற்காக, கனரக வண்டிகளைக் கொண்டுவரும் வழியில், படைவீரர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர் என்றும் கூறப்படுகின்றது.

Jubbet al-Dhib பகுதியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உதவும் நோக்கத்தில், அப்பகுதியின் அதிகாரிகள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தோடு தொடர்புடைய பன்னாட்டு அரசு-சாரா நிறுவனங்கள் இணைந்து, இப்பள்ளியை கட்டினர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த அநீதியைப் பார்த்து வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கலைப்பதற்காக, இஸ்ரேல் படைவீரர்கள் வாகனங்களோடு அவ்விடத்தில் குவிந்து, மேஜைகள், நாற்காலிகள், கட்டட சாமான்கள் என, எல்லாவற்றையும் எடுத்துச் சென்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.