2017-08-25 15:32:00

மாஸ்கோ பயணம் பற்றிய பகிர்வு, கர்தினால் பரோலின்


ஆக.25,2017. இரஷ்யாவுக்கு தான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற சந்திப்புக்கள் அனைத்தும், மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்திருந்தன என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் சமூகத் தொடர்பக செயலகத்தின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மாஸ்கோவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இவ்வியாழனன்று உரோம்  திரும்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின், வெளியுறவு அமைச்சர் Lavrov, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில், ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவு தலைவர் பேராயர் ஹிலாரியோன் ஆகிய நால்வரோடு இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து பேசினார்.

இந்த சந்திப்புகள் அனைத்தும், மிகவும் நல்ல நட்பு நிறைந்த சூழலில் இடம்பெற்றன என்றும், முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், திருத்தந்தைக்கு, உடன்பிறப்பு உணர்வு மிகுந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தது மிகவும் நல்ல அடையாளம் எனவும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மாஸ்கோவில், கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்து, கலந்துரையாடி, கத்தோலிக்கரின் நிலைமை பற்றியும் அறிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

மாஸ்கோவில் கத்தோலிக்கருக்கு திருப்பலி நிறைவேற்றியவேளை, அத்திருப்பலியில்   காணப்பட்ட மக்களின் பங்களிப்பும், ஆழமான விசுவாசமும், நம் எல்லாருக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்றும் கூறினார், கர்தினால் பரோலின்.

முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிச ஆட்சியில், கத்தோலிக்கரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில ஆலயங்களைத் திருப்பிக் கொடுப்பது, உக்ரைன் நிலவரம், மத்திய கிழக்கில் அமைதி போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.