2017-08-26 13:30:00

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


2014ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரியாவிலிருந்து இத்தாலிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் தன்னுடன் பயணம் செய்த நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பேட்டியில், தென் கொரியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள், உலகப் பிரச்சனைகள், திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அடுத்தப் பயணங்கள், வத்திக்கானில் திருத்தந்தை நடத்தும் வாழ்க்கை, ஒய்வு பெற்றுள்ள திருத்தந்தை பெனெடிக்ட் அவர்களுடன் உறவு என்று பல கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, திருத்தந்தை அளித்த பதில், இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கிறது. 2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் திருத்தந்தை கலந்துகொண்ட உலக இளையோர் நாள் நிகழ்வை பின்னணியாக வைத்து, அந்நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு திருத்தந்தை அளித்த பதிலும், இதோ:

நிருபர்: ரியோ நகரில் கூடியிருந்தோர், 'பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ' என்று கத்தியபோது, நீங்கள் அவர்களிடம் 'கிறிஸ்து, கிறிஸ்து' என்று கத்தச் சொன்னீர்கள். இவ்வளவு புகழை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? இவ்வளவு புகழுடன் எவ்வாறு வாழ்கிறீர்கள்?

திருத்தந்தை: இதற்கு எவ்விதம் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் இவ்வளவு மகிழ்வுடன் இருப்பதைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மக்களின் தாராளமனதைக் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இறைவன் மிக நல்லவற்றையே செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். ஆழ்மனதில், என் பாவங்கள், தவறுகள், இவற்றை நான் எண்ணிப்பார்க்க முயல்கிறேன். நான் முக்கியமானவன் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

இந்த புகழ், ஆரவாரம் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பின், நான் என் தந்தையின் இல்லம் செல்வேன் என்று தெரியும். இவற்றை (மக்களின் புகழ்ச்சியை) அதிகம் நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய எண்ணங்களோடு இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்பது பொருத்தமாகத் தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு தலைவர், எவ்விதம் சிந்தித்து, செயல்பட்டு, வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது. ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணி செய்வதற்கே என்பதை, தான் திருஅவை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கு மாறாக, ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளர்’ என்றும் மேடையில் முழங்கிக்கொண்டு, அதற்கு எதிர்மாறாகச் செயலாற்றும் தலைவர்களையும் நாம் இன்றைய உலகில் பார்த்து வருகிறோம்.

இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. ஒருவருக்கு அதிகாரம் தரப்படுவதை, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் இன்றைய வாசகங்களில் விவரிக்கின்றனர்.

பதவியிலிருந்த செபுனா என்ற அதிகாரி, அகந்தை கொண்டு, தன் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாததால், அவரை நீக்கிவிட்டு, எலியாக்கிம் என்பவரை இறைவன் உயர்த்துவதை, இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். திருஅவையின் முதல் தலைவராக, புனித பேதுருவை இயேசு அறிவிப்பதை நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுகிறார். எலியாக்கிமுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை, பல்வேறு உருவகங்கள் வழியே இறைவன் விவரிக்கிறார். இதோ அப்பகுதி:

எசாயா 22: 20-22

அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.

அங்கி, கச்சை, தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் என்ற பல அடையாளங்கள் வழியே எலியாக்கிமின் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்த ஆடம்பர அடையாளங்களைத் தொடர்ந்து, இறைவன் பயன்படுத்தும் இரு உருவகங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதிகாரத்தில் உள்ள ஒருவரை, இறைவன் எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை, இவ்விரு உருவகங்களும் தெளிவாக்குகின்றன:

எசாயா 22:23

உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.

இஸ்ரயேல் குலத்தின் தலைவனை, இறைவன், உறுதியான இடத்தில் முளைபோல் அடித்துவைப்பார் என்ற சொற்கள், அதிகாரத்தில் இருப்போரிடம் விளங்கவேண்டிய சில அம்சங்களை விளக்குகின்றன. உறுதியான நிலத்தில் அடிக்கப்படும் முளையில் கயிறுகட்டி, கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. எவ்வளவு பலமாகக் காற்றடித்தாலும், நிலத்தில் அடிக்கப்பட்டுள்ள முளை, கூடாரத்தைக் காப்பாற்றும். அதேபோல், மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகள் பாதுகாப்பாக மேய்வதற்கு, அடித்துவைக்கப்பட்ட முளையில் அவை கட்டப்படும். காக்கும் தொழிலைச் செய்யும் முளைபோல, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான பணி, காக்கும் பணி என்பதை இவ்வுருவகம் முதலில் நமக்கு உணர்த்துகிறது.

அடுத்ததாக, உறுதியான இடத்தில் ஒரு முளை ஊன்றி நிற்பதற்கு, அது, தன் தலைமீது அடிகளைத் தாங்கவேண்டும். எவ்வளவு வலிமையாக அடிகள் விழுகின்றனவோ, அவ்வளவு ஆழமாக முளை, பூமிக்குள் புதைந்து, உறுதியாக நிற்கமுடியும். அதை நம்பி கூடாரங்களையோ, மிருகங்களையோ அதில் கட்டமுடியும். அதேபோல், தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள்மீது விழும் பல அடிகளைத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் நின்றால், பயனுள்ள தலைவர்களாகச் செயல்பட முடியும்.

அடுத்ததாக, அரியணை என்ற உருவகமும் தலைவனுக்குரிய ஒரு பண்பை விளக்குகிறது. அரியணையை யாரும் சுமப்பது கிடையாது; அதுவே மற்றவர்களைச் சுமக்கிறது. அது மற்றவர்களைத் தாங்கும்போதுதான் பயனும், புகழும் பெறுகிறது. காலியாக இருக்கும் அரியணை, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. அதேபோல், தலைவர்களும், மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும் பெறுகின்றனர்.

அண்மையில், மின்னஞ்சல் வழியே என்னை வந்தடைந்த ஒரு புகைப்படத்தில், யானை ஒன்று நதியைக் கடந்து செல்வதாகவும், அதன் முதுகின் மேல் நாயொன்று நின்றுகொண்டிருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட Michael Watson என்பவரது கூற்று, ஆழமான உண்மையைச் சொல்லித் தருகின்றது – Strong people don’t put others down. They lift them up. அதாவது, சக்திமிக்கவர்கள், அடுத்தவர்களை, கீழேத் தள்ளுவதில்லை. அவர்களை உயர்த்துகிறார்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக, திருஅவையின் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திய விதத்திலிருந்து, அவர் 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோலவும், பிறரைத் தாங்கும் அரியணைபோலவும்' விளங்குவதைக் காணமுடிகிறது.

2014ம் ஆண்டு, ஆசிய இளையோரின் புகழ் மழையில் நனைந்து, புத்துணர்வு பெற்று, கொரியாவிலிருந்து, ஆகஸ்ட் 18, திங்கள் மாலை, உரோம் நகர் திரும்பினார், திருத்தந்தை. அடுத்தநாள், ஆகஸ்ட் 19, செவ்வாய் அதிகாலையில், திருத்தந்தையின் நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மூவர், ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தம்பி, மறைந்த Alberto Bergoglio அவர்களின் மகன், Emmanuel Bergoglio அவர்கள் ஓட்டிச்சென்ற கார், ஒரு லாரியுடன் மோதியதில், அக்காரில் பயணித்த எம்மானுவேல் அவர்களின் மனைவி, Valeria அவர்களும், அவர்களுடைய இரண்டுவயது குழந்தை Joseம், எட்டுமாதக் குழந்தை, Antonioவும் கொல்லப்பட்டனர். 35 வயதான எம்மானுவேல் அவர்கள், பலத்த காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.

வேதனை நிறைந்த இச்செய்தியால், உருவான மனப்புயலை சுமந்துகொண்டு, ஆகஸ்ட் 20, புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தது, ஓர் உன்னதத் தலைவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. அன்றைய மறையுரையில், தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை மக்கள் முன் எடுத்துரைத்து, திருத்தந்தையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதைச் சுட்டிக்காட்டியபின், மக்களின் செபங்களுக்காக அவர் விண்ணப்பித்தார். புதன் பொது மறையுரையை வழங்கிய நேரம் முழுவதும் திருத்தந்தை நடந்துகொண்ட விதம், 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோல, பிறரைத் தாங்கும் அரியணைபோல' அவர் இருந்தார் என்பதை உணரவைத்தது.

புகழ் மாலைகள் வந்து குவிந்தாலும் சரி, துன்பம் என்ற புயல் வீசினாலும் சரி, சீரான மனநிலையுடன் செயல்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைத்துவம், அதிகாரம் என்ற சொற்களுக்கு, ஆழ்ந்த அர்த்தங்கள் தருகிறார். திருத்தந்தை பெற்றிருக்கும் சீரான மனநிலைக்கு ஒரு முக்கிய காரணமாக நான் கருதுவது, அவர் தன்னைப்பற்றி கொண்டுள்ள தெளிவான புரிதல் அல்லது, 'சுய அறிவு' (self knowledge). ஒருவர் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள, தன்னையே சரியாகப் புரிந்துகொள்ள, சுயத் தேடல்கள் நிகழவேண்டும். இத்தகைய ஒரு தேடலை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள், நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில், பல கேள்விகள், நம் உள்ளத்தில் எழும். அவற்றில், மிக முக்கியமான ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி.

இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. நான் யார் என்ற தேடலை அடிப்படையாகக் கொண்டு, இயேசு எழுப்பிய இரு கேள்விகள், அன்று, சீடர்களுக்கும், இன்று, நமக்கும், சவாலாக அமைந்துள்ளன. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன, அவ்விரு கேள்விகள்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், மறைகல்வி ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம். ஆனால், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இந்தக் கேள்விக்குப் பதிலாகவேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. “என்னைப்பற்றிப் புரிந்து கொள்… என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா” என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் இவ்வழைப்பு, சவால்கள் நிறைந்த அழைப்பு!

இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப்போக, அவரை இரசிக்க, கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நாம் கற்றுத்தேர்ந்த பதில்கள் அனைத்தும், வரிசையாக வெளிவரும். ஆனால், அந்த புத்தக அறிவோடு, நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13: 1)

எனவே, நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு, இயேசு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பை ஏற்பதற்கு, உண்மையிலேயே மிகுந்த துணிவு தேவை. இந்தத் துணிவை உணர்த்தும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது...

கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். உலகப் புகழ்பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்குமாடி கட்ட்டங்களுக்கிடையே, கயிறு கட்டி, சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.

அதை அற்புதமாக அவர் செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப் பற்றி நான் கேள்வி பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது நானே நேரில் அவற்றைப் பார்த்துவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுச் சொன்னார்.

"மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி..." என்று கேட்டார் அந்தக் கலைஞர்.

"உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய், அதிசயமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப் போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் திறமையில் நம்பிக்கை வைத்து, தான் ஆற்றும் ஆபத்தான சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு கரைந்து விட்டார்.

இயேசு தந்த அழைப்பை, புரிந்தும் புரியாமலும், புனித பேதுரு, தன் உள்ளத்தில் உணர்ந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கிறார். “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று அறிக்கையிடுகிறார். தன் அறிவுத்திறனைக் கொண்டு அல்ல, மனதில் தோன்றிய விசுவாச உணர்வுகளைக் கொண்டு, தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை, புகழ்வதோடு மட்டுமல்லாமல், திருஅவையின் முதல் தலைவராகவும் அவரை நியமிக்கிறார், இயேசு.

திருஅவையின் 266வது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை, தன் அறிவால் உணர்ந்ததைவிட, உள்ளத்தால் அதிகம் உணர்ந்தவர் என்பதை, நாம் பலவழிகளில் அறிவோம். தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை திருஅவைத் தலைவராக அறிவித்து, இயேசு அவரை வழிநடத்தியதுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், உடல், உள்ள நலத்துடன் வழிநடத்த வேண்டுமென்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.