2017-08-26 14:27:00

மதங்களைத் தாண்டி மனிதர்களாக வாழ்ந்து அன்புகூர்வோம்


ஆக.,26,2017. கடந்த வாரம் வெள்ளியன்று ஃபின்லாந்தின் Turku எனுமிடத்தில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அவ்விடத்தில் இறந்தோருக்கு மரியாதை செலுத்தி, செபிக்க, இவ்வாரம் அங்கு வந்த மக்களுக்கு, ஆன்மீகச் சேவையாற்றி வருகிறது தலத்திருஅவை.

மக்கள் அமைதியான முறையில் இவ்விடத்திற்கு வந்து செபித்துவிட்டுச் சென்றாலும், அவர்களின் மனங்களில் இன்னும் துயரம் தங்கியிருப்பதைக் காணமுடிகிறது என உரைக்கும் செய்தி நிறுவனங்கள், மொரொக்கோ நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞரால் இரு அப்பாவி ஃபின்லாந்து பெண்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், மற்றும், எட்டு பேர் காயப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கு இன்னும் விடைகிடைக்காமல் கத்தோலிக்கர்கள் திணறுவதாக Turku பங்குதளத்தின் அருள்பணி Jean Claude Kabeza  அவர்கள் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றன.

ஃபின்லாந்தில் வாழும் 55 இலட்சம் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியாக, வெளிநாட்டு குடியேற்றதாரர்கள் வாழும் நிலையில், மதங்களைத் தாண்டி, ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து உதவிச் செய்பவர்களாக மக்கள் வாழவேண்டும் என, அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள் அனைத்து மக்களிடமும் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.