2017-08-26 14:21:00

மனமாற்றம், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் வழியாக புதுவாழ்வு


ஆக.,26,2017. நைஜீரியாவின் அஹியாரா மறைமாவட்டத்திற்கு, திருப்பீடத்தால் நியமிக்கப்பட்ட ஆயரையும், அவர் நிர்வாகத்தையும் ஏற்பதன் வழியாக, அம்மறைமாவட்ட அருள்பணியாளர்களும், துறவிகளும், பொதுநிலையினரும், திருஅவைக்கும், திருத்தந்தைக்கும், தங்கள் கீழ்ப்படிதலை நிரூபிக்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

நைஜீரியாவின் Owerri மாநிலத்தின் ஆயர்கள் ஒன்றிணைந்து அண்மையில் நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட  அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், ஐந்து ஆண்டுகளாக அஹியாரா மறைமாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சூழல்கள், தலத் திருஅவைக்கு மட்டுமல்ல, தலைமைப்பீடத்திற்கும், திருத்தந்தைக்கும் மனவருத்தத்தைத் தருவதாக உள்ளன என கூறியுள்ளனர்.

திரு அவையால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆயர் Peter Okpaleke அவர்களை ஏற்கமறுத்து, திருப்பீடத்தின் முடிவுக்கு எதிராக செயல்பட்டுவரும் அருள்பணியாளர்கள், மற்றும், விசுவாசிகள் குறித்து கவலையை வெளியிட்ட ஆயர்கள், மனமாற்றம், மன்னிப்பு மற்றும் ஒப்புரவிற்கான அழைப்பையும் முன்வைத்துள்ளனர்..

கடந்த ஈராண்டுகளாக நைஜீரியா நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் இன மற்றும் மத மோதல்கள் குறித்தும் தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அண்மையத் தேர்தல் முறைகேடுகள், மற்றும், மக்களிடையே ஒற்றுமையின்மை போன்றவற்றையும் சுட்டிக்காட்டி, இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.