சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

பாசமுள்ள பார்வையில்.. முதல் கல்விக்கூடம் தாயின்மடி

தாயின் கை பிடித்து பள்ளிக்கு - AFP

28/08/2017 16:04

சிறந்த தொழிலதிபராக தான் வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்த தன் அம்மாவை அன்று நினைத்துக்கொண்டிருந்தார் மணி. அன்று மணிக்கு, பிளஸ் 1 பள்ளித் தேர்வு ஆரம்பிக்கும் நாள். காலையில் அம்மாவின் குரல் கேட்டது. ‘‘கண்ணா, இன்னுமா எந்திரிக்கலை? பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகுது பாரு! சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு, இன்னிக்கு தேர்வு ஆரம்பிக்குதுல!’’ என, அம்மா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். பலமுறை எழுப்பிய அம்மாவின் குரலுக்கு மகன் ஒருமுறை பதில் சொன்னான்... ‘எனக்கு உடம்பு சரியில்லைம்மா!’ என்று. உடனே அம்மா மகன் படுத்திருந்த அறையின் வாசலில் வந்து நின்றார்... ‘‘உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. கிளம்பு... கிளம்பு!’’ என்றார் அம்மா. மகன் படுக்கையில் இருந்து எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். ‘‘அம்மா! எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கலைம்மா. எனக்கு மட்டும் எல்லாமே மோசமா நடக்குது. பாடங்கள்ல நிறைய தப்பு பண்றேன்... திட்டும் அடியும் வாங்றேன். யாருக்குமே என்னைப் பிடிக்கலை. எனக்குன்னு யாருமே இல்லை. எப்போ பார்த்தாலும் பரீட்சை. படிக்கப் படிக்க குழப்பம்தான் அதிகமாகுது. நினைச்சாலே கடுப்பா இருக்கும்மா. நிச்சயமா சொல்றேன்... நான் பள்ளிக்குப் போகவே மாட்டேன்...’’ மகன் சொல்லி முடித்ததும், அம்மா மகன் அருகில் அமர்ந்தார்... ‘‘மன்னிச்சுக்கடா கண்ணு! நீ பள்ளிக்குப் போய்த்தான் ஆகணும். நாம தப்பு பண்றோம்னா அதுலருந்து கத்துக்கறோம்னு அர்த்தம். அதைத்தான் நீ பள்ளியில் செஞ்சுகிட்டு இருக்கே. தவறுகள்தான் நம்ம வளர்ச்சிக்கு உதவும். உன்னை வச்சு ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் விமர்சனம் செய்ய முயற்சி செய்யாதே. உனக்குன்னு யாருமே இல்லை, உன்னை யாருக்கும் பிடிக்கலைங்கறதை நான் நம்ப மாட்டேன். உனக்குப் பள்ளியில் நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். எல்லாத் தேர்வும் நமக்கு குழப்பத்தை அதிகமாக்குங்கறது உண்மைதான். ஆனா, நம்ம வாழ்க்கை முழுக்க பல வழிகள்ல பல தேர்வுகள் காத்திருக்கே... அப்போ என்ன செய்யப் போறோம். பொதுவாக பள்ளியில் கிடைக்கிற அனுபவம், நம்ம வாழ்க்கைக்கு உதவப் போகுதுன்னு புரிஞ்சுக்கோ!’’ அம்மா இவ்வாறு சொல்லி முடித்ததும் அன்று  முணுமுணுத்தபடி பள்ளிக்கூடம் போகத் தயாரானான் மணி. இன்று மணி, நிறுவனம் ஒன்றின் சிறந்த அதிபர்.

பிள்ளைக்கு முதல் கல்விக்கூடம் தாயின்மடிதான். அம்மா என்பது வெறும் பெயரல்ல, அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/08/2017 16:04