2017-08-28 16:26:00

ஏமனில் காலரா நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது


ஆக.28,2017. ஏமன் நாட்டில் அப்பாவி மக்களின் உயிரைப் பலிவாங்கி வந்த காலரா நோயின் தீவிரம், பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பான யுனிசெஃப் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து, காலரா நோயால் பலியாவோரின் எண்ணிக்கை, மூன்றில் ஒருபகுதியாக குறைந்துள்ளதாக அறிவிக்கும் யுனிசெஃப் அமைப்பு, இதுவரை இந்நோய்க்கு பலியானவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது.

ஏமன் நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய விருப்பப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று உதவிகளை வழங்கி வருவதாகவும், இதுவரை, 27 இலட்சம் குடும்பங்களை இவர்கள் சந்தித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிச்சாவுகளின் பிடியிலிருக்கும் ஏமன் நாட்டில் குறைந்தபட்சம் 1 கோடியே 50 இலட்சம் மக்கள் சுத்தமான குடிநீர் மற்றும் நலஆதரவுச் சேவைகளை பெறமுடியாத நிலையிலிருப்பதாகவும், ஏறத்தாழ மூன்று இலட்சத்து 85 ஆயிரம் குழந்தைகள், சத்துணவுக் குறைபாட்டால் துன்புறுவதாகவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.