2017-08-28 16:27:00

கிறிஸ்தவ மதிப்பீடுகளை அரசியல் அரங்கில் வாழவைத்தல்


ஆக.28,2017. கத்தோலிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள், கத்தோலிக்கப் படிப்பினைகளுக்குச் செவிமடுப்பதுடன், உலகில் காணப்படும் அரசியல் பிரிவினைகளை அகற்றுவதில் ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அகில உலக கத்தோலிக்கப் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு அவையின் பிரதிநிதிகளை இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள்,  மனிதாபிமானமும் நீதியும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் திருஅவையின் ஒழுக்க ரீதி, மற்றும், சமூகப்படிப்பினைகள் பெரும் தூண்டுதலைத் தருகின்றன என்றார்.

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களின் சார்பாக கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

உலகின் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு 2010ம் ஆண்டு வியன்னா கர்தினால் Christoph Schönborn, மற்றும் ,பிரிட்டானிய பாராளுமன்ற உறுப்பினர் Lord David Alton ஆகியோரால் உருவாக்கப்பட்ட அகில உலக கத்தோலிக்கப் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு அவை, அரசியல் அரங்கில், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் இறுதி வாரத்தில், உரோம் நகரில், நான்கு நாட்கள் கூடி விவாதிக்கின்றது. அந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தையை சந்திப்பதையும் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.