2017-08-28 16:06:00

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக திருத்தந்தை செபம்


ஆக.28,2017. அண்மை பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்திய மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவித்ததுடன், அவர்களுக்காக செபிக்கும்படி அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் நாட்டில் துன்பங்களை அனுபவித்துவரும் ரொஹிங்கியா சமூகத்திற்காக செபிப்பதாகவும் தெரிவித்தார்.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வட இந்தியாவில் இடம்பெற்ற பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையை தெரிவிப்பதாகவும், இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தான் செபிப்பதாகவும் அறிவித்தார், திருத்தந்தை.

இந்த மூன்று நாடுகளிலும், பெருமழையால் ஏறத்தாழ 1 கோடியே 60 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரொஹிங்கியா சிறுபான்மை மக்களுடன் தன் அருகாமையை தெரிவிப்பதாகவும், அவர்களை காப்பற்றவேண்டும் என இறைவனை நோக்கி இறைஞ்சும் அதேவேளை, நல்மனதுடையோர் முன்வந்து இம்மக்களுக்கு உதவவேண்டும் என தான் விண்ணப்பிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மாரின் ரொஹிங்கியா மக்கள் தங்கள் முழு உரிமைகளைப்பெற வழிச் செய்யப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, அம்மக்களுக்காக செபிப்பதற்கு அழைப்புவிடுத்து, சிறிது நேரம் அமைதியில் செபித்தார்.

மியான்மாரில் வந்து வாழும் பங்களாதேஷ் இஸ்லாமிய சிறுபான்மை இனமான ரொஹிங்கியா இன மக்களை, மியான்மார் இராணுவத்துடன் இணைந்து, மியான்மார் தேசியவாதிகள் கொன்று குவிப்பது, தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.