2017-08-28 15:53:00

பங்களாதேஷ் மற்றும் மியான்மாரில் திருத்தந்தை


ஆக.28,2017. இவ்வாண்டு நவம்பர் மாதம் 27 முதல், டிசம்பர் 2 வரை, மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திருப்பீடம் அறிவித்துள்ளது.

மியான்மார் நாட்டுத் தலைவர்கள், மற்றும் தலத்திருஅவை தலைவர்களின் அழைப்பிற்கு இணங்க, நவம்பர் மாதம் 27 முதல் 30 முடிய யங்கூன் மற்றும் Nay Pyi Taw நகர்களில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ள திருத்தந்தை, நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ம்தேதிவரை பங்களாதேசில் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீட தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

'நல்லிணக்கமும் அமைதியும்' என்ற தலைப்பை, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்கென பங்களாதேஷ் நாடு தெரிவு செய்துள்ள வேளை, 'அனபும் அமைதியும்' என்பது, மியான்மார் நாட்டு திருத்தூதுப் பயண தலைப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் நாடு இத்திருப்பயணத்தையொட்டி தயாரித்துள்ள இலட்சினையில், திருத்தந்தையை அமைதிப் புறாவாக வடிவமைத்து, அதன் உள்ளே, வாழ்வு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மலர் ஒன்று வரையப்பட்டு, அதன் மேல் கிறிஸ்துவின் இருப்பைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக, சிலுவை வரையப்பட்டுள்ளது.

வத்திக்கானுக்கும் பங்களாதேஷிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவின் அடையாளமாக, இரு நாட்டுக் கொடிகளின் நிறங்களும் இந்த இலட்சினையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மியான்மார் திருப்பயணத்திற்கென அந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இலட்சனையில், இதயம் வரையப்பட்டு, அதன் ஒருபுறத்தில் வத்திக்கான் நாட்டு கொடியின் வண்ணங்களும், மறுபுறத்தில் மியான்மார் நாட்டு கொடியின் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்த இதயத்திற்குள் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், திருத்தந்தை, புறாவை தாங்கியிருப்பதாக சித்திரிக்கப்பட்டுள்ளது, அவர் அமைதியின் தூதராக அந்நாட்டிற்கு வருவதைக் குறிப்பிடுவதாக உள்ளது. இதயத்திற்குள், திருத்தந்தை அருகே மியான்மார் வரைபடம், வானவில்லின் ஏழு வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.