2017-08-29 15:22:00

அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள புதிய கோவில்


ஆக.,29,2017. அன்னை தெரேசாவின் திருவிழா அன்று அன்னையின் பெயரால் கோசொவோ (Kosovo) நாட்டின் பிரிஸ்டினா எனுமிடத்தில் திறக்கப்படவிருக்கும் கோவில் திருநிலைப்பாட்டு நிகழ்வுக்கு, தன் பிரதிநிதியாக கர்தினால் ஒருவரை நியமித்து, செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போது இருக்கும் கோசொவோ நாட்டிற்கு அருகிலேயே பிறந்த  அன்னை தெரேசாவுக்கு, கோசொவோவில் வாழும் அல்பேனிய மக்கள் வெளியிட்ட விருப்பத்தின்பேரில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், கோசொவோ தலைநகர் பிரிஸ்டினாவில் செப்டம்பர் 5ம் தேதி திருநிலைப்படுத்தப்பட உள்ளது.

அல்பேனிய கர்தினால் எர்னெஸ்டோ சிமோனி அவர்களை, தன் பிரதிநிதியாக நியமித்து, இத்திருநிலைப்பாட்டு நிகழ்வுக்குச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய கொண்டாட்டங்கள், மக்களின் விசுவாச வாழ்வை மேலும் பலப்படுத்த உதவுவதாக இருக்கட்டும் என நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

அன்னை மரியா மற்றும் அன்னை தெரேசாவின் பரிந்துரைகள், பிரிஸ்டினா பகுதி மக்களுக்கு என்றென்றும் இருக்கும் என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

செர்பியாவிலிருந்து 2008ம் ஆண்டு, சுதந்திர நாடாக பிரிவதாக அறிவித்து, சில நாடுகளாலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ள கோசொவோ நாட்டின் தலைநகரில் பெரும்பான்மையாக வாழும் அல்பேனிய மக்களிடையே, அன்னை தெரேசாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், அவ்வன்னை இறந்த நாளும், திருநாளும் இணைந்துவரும் செப்டம்பர் 5ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்டு, திறக்கப்பட உள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.