2017-08-29 15:39:00

பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம், மத நல்லிணக்கக் கொண்டாட்டம்


ஆக.,29,2017. இவ்வாண்டு நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை பங்களாதேஷ் நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணம், அங்கு நிலவிவரும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார், அந்நாட்டு கர்தினால் பேட்ரிக் டி'ரொசாரியோ.

பல நூற்றாண்டுகளாக பங்களாதேசில் நிலவிவரும் மத நல்லிணக்கம், மற்றும், மதங்களிடையான உறவுகளை உறுதிப்படுத்துவதாக அமையவிருக்கும் இந்த திருத்தூதுப்பயணம், பங்களாதேஷ் மக்களால் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த ஒன்று எனவும் கூறினார், கர்தினால் டி'ரொசாரியோ.

பங்களாதேஷ் நாட்டிற்கு வரவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் இந்துக்களும் முன்வந்து வரவேற்க காத்திருக்கிறார்கள் எனவும் உரைத்த கர்தினால், அளவற்ற காலாச்சார வளங்களைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டில், கிறிஸ்தவத்தின் இருப்பு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது என மேலும் உரைத்தார்.

பல்வேறு மதங்களையும் மதித்து ஏற்று, அவர்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்கும் பங்களாதேஷ் நாட்டின் இந்த சிறப்புப் பண்பைக் கொண்டாட திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் உதவும் என மேலும் கூறினார், பங்களாதேசின் டாக்கா பேராயர், கர்தினால் பேட்ரிக் டி'ரொசாரியோ.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.