சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் – தொடக்ககால கிறிஸ்தவம் பாகம் 8

ஆதிகாலத்தில் கிறிஸ்தவம் பரவிய இடம் - AP

30/08/2017 16:10

ஆக.30,2017. கி.மு. முதல் நூற்றாண்டில் உரோமைக் குடியரசில் பதட்டநிலைகளும், உள்நாட்டுச் சண்டைகளும் இடம்பெற்றன. இதன் விளைவாக, கி.மு.27ம் ஆண்டில் உரோமைக் குடியரசு வீழ்த்தப்பட்டு, உரோமைப் பேரரசு உருவானது. ஜூலியஸ் சீசர் உரோம் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றி, சர்வாதிகாரியாக ஆட்சியைத் தொடங்கினார். இவர் கி.மு.44ம் ஆண்டில் கொல்லப்பட்டார். பின் கி.மு.31ம் ஆண்டில் ஒக்டாவியன், மாற்கு அந்தோனியை வட ஆப்ரிக்காவில் முறியடித்து, உரோமையின் முதல் பேரரசராக, அதாவது அகுஸ்துசாக ஆட்சியில் அமர்ந்தார். இப்பேரரசில் கி.மு.14ம் ஆண்டுவரை, நிலையான தன்மையும் அமைதியும் நிலவியது. பின் த்ராஜன்(98–117), ஏட்ரியன் (117–138), அந்தோனியுஸ் பயஸ்(138–161), மார்க்குஸ் அவுரேலியுஸ்(161–180), கலிகுவா (37–41), நீரோ (54–68) என மன்னர்கள் ஆட்சி செய்தனர். உரோமைப் பேரரசும் விரிவடைந்தது. திபேரியுஸ் (14–37) ஆட்சி காலத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பின் வளர்ந்த புதிய நெறியாகிய கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள், அடிக்கடி சித்ரவதைக்கு உள்ளாகினர் மற்றும் கொலை செய்யப்பட்டனர். இவையனைத்தும் முதலாம் கான்ஸ்ட்டடைன் (312–337)ஆட்சிக்கு வரும்வரைதான் நீடித்தன. அதன்பின், உரோமைப் பேரரசில் கிறிஸ்தவம் அரசு மதமாக அங்கீகரிக்கப்பட்டது. உலகின் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் பரந்துவிரிந்திருந்த உரோமைப் பேரரசை நிர்வாகம் செய்வதற்கு எளிதாக, அப்பேரரசு, மேற்கு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. ஆனால் ஜெர்மானிய ஒடாசர் என்பவரால் கி.பி.476ம் ஆண்டில், மேற்கு உரோமைப் பேரரசும், முதலாம் மெக்மெட், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டான்டிநோபிளை, கி.பி.1453ம் ஆண்டில் கைப்பற்றியதையடுத்து கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தன.  

அக்காலத்தில் உரோமைப்  பேரரசுக்கு வெளியே வாழ்ந்த மக்களை காட்டுமிராண்டிகள் என்றே உரோமையர்கள் அழைத்தனர். காட்டுமிராண்டிகள் இப்பேரரசுக்குள் நுழைந்ததையடுத்து, கி.பி.நான்காம் நூற்றாண்டில், உரோமை இராணுவம் மிகவும் இன்னலுற்றது. உரோமையர்கள் தங்களின் இராணுவத்தை பெரிதாக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். கி.பி.4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் உரோமை இராணுவத்தில் ஆறு இலட்சம் ஆண்கள் இருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர், உரோமின் வட எல்லைகளில் அமர்த்தப்பட்டனர். விரிவுபடுத்திய இராணுவத்தைப் பராமரிப்பதற்கென, மக்களிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரியை பலரால் கட்ட முடியவில்லை. இது பேரரசில் பரவலாக ஏழ்மையை உருவாக்கியது. சிலர் தங்கள் பிள்ளைகளை அடிமைகளாக விற்றனர், மற்றும் பலர் பசியால் மடிந்தனர். கொள்ளை நோயும் பரவியதால், உரோமையில் மக்கள் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேர் வீதம் இறந்தனர். இதனால் உரோமையில் குடிமக்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. அதனால் இராணுவத்தில் சேருவதற்கும் ஆட்கள் இல்லை. கிறிஸ்தவம் வளர்ந்து வந்ததும், உரோமைப்  பேரரசுக்கு பிரச்சனையை உருவாக்கியது. ஏனென்றால், இப்பேரரசின் பெருமளவான மக்கள் துறவிகளாக மாறினர், திருமணம் செய்யவும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்தனர். இந்நிலை, குடிமக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, வரிகட்டுவோரின் எண்ணிக்கையையும் குறைத்தது.

இயேசு கிறிஸ்து அகிம்சா வழியை, அதாவது வன்முறையற்ற வழியைப் போதித்தார் என கிறிஸ்தவர்கள் சொல்லி, இராணுவத்திலும் சேருவதற்கு மறுத்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத குடிமக்களும்கூட இராணுவத்தில் சேருவதற்கு மறுத்தனர். இதனால், அடிமைகளையும், மல்யுத்த வீரர்களையும் குற்றவாளிகளையும் இராணுவத்தில் சேர்க்கவேண்டிய கட்டாயநிலை பேரரசர்களுக்கு ஏற்பட்டது. காட்டுமிராண்டிகளும் கூலிக்கு வேலைசெய்யும் படைவீரர்களாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் உரோமைப் பேரரசுக்கு விசுவாசமற்றவர்களாகவே இருந்தனர். அதேநேரம், அழுத்திய வரிச்சுமை மற்றும் வறுமையினால், சில உரோமை குடிமக்கள் ஆயுதம் தாங்கி போராடத் தொடங்கினர். கி.பி.283ம் ஆண்டில் Gaulலில் தொடங்கிய இந்தப் புரட்சி இயக்கம், 4ம், 5ம் நூற்றாண்டுகளில், உரோமைப் பேரரசின் ஏனையப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. Bagaudae எனப்படும் இந்தப் புரட்சியாளர்கள், உரோமைப் பேரரசிலே தனித்தனி நாடுகளை உருவாக்கினர். ஆனால், உரோமையர்கள், கூலிப்படை காட்டுமிராண்டிகளின் உதவிகளைக்கொண்டு இவர்களை நசுக்கி ஒடுக்கினர்.

இருந்தபோதிலும், உரோமை இராணுவம், தனது குடிமக்களை நாளுக்கு நாள் அடக்கி ஒடுக்கியது. இது ஜெர்மானிய பழங்குடி இனத்தவர் உரோமைக் கைப்பற்றுவதற்கு எளிதாக வழியமைத்தது. உரோம் அடிமைகள் Visigoths இனத்தவருடன் இணைந்தனர். இவ்வாறு மேற்கு உரோம் பேரரசு வீழ்ச்சியடைந்தது. முதலாம் மெக்மெட் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கி.பி.1453ம் ஆண்டில் கைப்பற்றியதையடுத்து கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது.

உரோமைப் பேரரசுக்கு வெளியே பாரசீகத்தில் கிறிஸ்தவம் பரவி வளர்ந்தது பற்றி அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

30/08/2017 16:10