சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை : எதிர்நோக்கிற்கும் நினைவாற்றலுக்கும் தொடர்பு

பேதுரு வளாகத்தில் குழந்தைகளுடன் - AP

30/08/2017 16:01

ஆகஸ்ட் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கிலேயே இம்மாத மறைக்கல்வியுரை சந்திப்புக்களை நடத்திவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்ததை முன்னிட்டு, விசுவாசிகளை, புனித பேதுரு பேராலய வளாகத்தில் சந்தித்தார். எதிர்நோக்கிற்கும் நினைவாற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு, குறிப்பாக, நம் அழைப்புக் குறித்த நினைவாற்றல் பற்றி, இந்நாளின் மறைக்கல்வி உரையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! எதிர்நோக்கிற்கும் நினைவாற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் மீண்டுமொருமுறை சிந்தனைகளைப் பகிர விரும்புகிறேன். இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, அவர்களை நோக்கி, 'நீங்கள் என்ன தேடுகிறீர்கள்' என கேட்டதையும், அப்போது மணி மாலை நான்கிருக்கும் என புனித யோவான்  எழுதியிருப்பதையும் நற்செய்தியில் காண்கிறோம். 'என்ன தேடுகிறீர்கள்' என்ற அந்த கேளிவியைத்தான் நம் காலத்திலும் நம்மை நோக்கி இயேசு கேட்கிறார். இளையோரின் இதயம், மகிழ்வையும், வாழ்வையும் ஆவலுடன் எப்போதும் தேடிக்கொண்டேயிருக்கும் ஆரோக்கியமான ஓர் இதயம் என்பதை இயேசு அறிந்துள்ளார்.

முதல் சீடர்களுக்கு, இச்சந்திப்பு, இயேசுவுடன் உருவான உறவின் துவக்கமேயாகும். அவர்கள் ஏற்றிருந்த அழைப்புக்கு வெளியே வந்து வாழும் ஒரு வாழ்வாகவும் இது இருந்தது. அவர்கள் இதயத்தில் இச்சந்திப்பு, ஒரு நெருப்பை தூண்டுவதாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த நெருப்பே, அவர்களை மறைபோதகர்களாக மாற்றியது. இவர்கள், இயேசுவுடன் கொண்டிருந்த முதல் சந்திப்பை தங்கள் வாழ்நாளெல்லாம் அசைபோட்டு வந்தனர். நாம் நம் அழைப்பை எவ்வாறு கண்டுகொள்கிறோம் என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. திருமணம் புரியவோ, துறவு வாழ்வை மேற்கொள்ளவோ, அல்லது குருத்துவ வாழ்வுக்கோ நாம் அழைக்கப்பட்டிருந்தாலும், அழைப்பின் ஆதிகாரணம், இயேசுவுடன் கொள்ளும் நம் சந்திப்பில் உள்ளது. எத்தனையோ துன்ப துயரங்கள் நடுவிலும்கூட,  அதன் நடுவே தோன்றும் ஒரு முதல் தீப்பொறியே, கடவுளுடன் கொள்ளும் மிக ஆழமான உறவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அந்த உறவே நமக்கு எதிர்நோக்கையும் மகிழ்வையும் வழங்குகிறது. நாம் இயேசுவுடன் கொண்ட முதல் சந்திப்பை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்தவர்களாக, நம் இதயங்களில் எரிந்துகொண்டிருக்கும் அந்த அன்பெனும் தீப்பொறியை ஒரு புதையலாக பாதுகாப்போமாக. நாம் மகிழ்ச்சி நிறைந்த சீடர்களாக இருந்து, கடவுளுடன் இணைந்து, மேலும் சிறப்பான ஓர் உலகு குறித்து கனவு காண்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நாம் பெற்றுள்ள எதிர்நோக்கின் காரணத்தைப் பகிர்வோம்.

இவ்வாறு, இவ்வார புதன் பொதுமறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் முதல்தேதி, அதாவது, இவ்வெள்ளியன்று, படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள் சிறப்பிக்கப்பட உள்ளதையும் சுட்டிக்காட்டி,னார். இந்நாளுக்கென தானும், கான்ஸ்டான்டிநோபிளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து சிறப்புச்செய்தி ஒன்றை தயாரித்துள்ளதாகவும், இதில் அனைவரின் பொறுப்பான அக்கறைக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளும், இவ்வுலகமும் எழுப்பும் அழுகுரலுக்கு, பொறுப்பிலுள்ளோர் செவிமடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம், எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க அசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

30/08/2017 16:01