2017-08-30 15:57:00

கசக்ஸ்தான் நாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் பயணம்


ஆக.30,2017. ஒருங்கிணைக்கப்பட்ட மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஆகஸ்ட் 30, இப்புதன் முதல், செப்டம்பர் 4 வருகிற திங்கள் முடிய, கசக்ஸ்தான் நாட்டில், 'எக்ஸ்போ 2017' உலகக் கண்காட்சி நிகழ்விலும், ஏனைய கூட்டங்களிலும் கலந்துகொள்வார் என்று, அத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம் முதல், கசக்ஸ்தான் நாட்டின் தலைநகர், அஸ்தானாவில் நடைபெற்றுவரும் 'எக்ஸ்போ 2017' உலகக் கண்காட்சியில், "பொதுநலனுக்காக சக்தி: நம் பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற மையக்கருத்துடன், திருப்பீடத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரங்கத்தை கர்தினால் டர்க்சன் அவர்கள் பார்வையிடுகிறார்.

இத்தருணத்தில், ஆகஸ்ட் 31, இவ்வியாழனன்று, கசக்ஸ்தான் மத விவகாரங்கள் துறையும், திருப்பீட பலசமய உரையாடல் அவையும் இணைந்து, ஏற்பாடு செய்துள்ள பலசமய உரையாடல் கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் அவர்களும், கசக்ஸ்தானில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்களும்  கலந்துகொள்கின்றனர்.

செப்டம்பர் 1ம் தேதி, படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அஸ்தானாவில் நடைபெறும் செப வழிபாட்டிலும், செப்டம்பர் 2ம் தேதி வத்திக்கான் தேசிய நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி நடைபெறும் கூட்டத்திலும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

வருங்கால சக்தி என்ற மையக்கருத்துடன், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், நாசர்பயேவ் (Nazarbayev) பல்கலைக்கழகமும் இணைந்து செப்டம்பர் 4ம் தேதி, ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வது, கர்தினால் டர்க்சன் அவர்களின் இறுதி நிகழ்வாக அமையும்.

'எதிர்கால சக்தி' என்ற மையக்கருத்துடன், அஸ்தானாவில், ஜூன் 10ம் தேதி துவங்கிய 'எக்ஸ்போ 2017' உலகக் கண்காட்சியில், 115 நாடுகளும், 22 உலக நிறுவனங்களும் பங்கேற்றுவருகின்றன என்பதும், இந்த கண்காட்சி செப்டம்பர் 10ம் தேதி நிறைவுபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.