2017-08-30 15:51:00

பாசமுள்ளப் பார்வையில்…............, : கரை சேர உதவும் தாய்


தன் தந்தை இறந்ததும், நாட்டை ஆளும் பொறுப்பேற்ற இளவரசர், தான்தோன்றித்தனமாக நடக்கத் துவங்கினார். எதிலும் பொறுப்பற்று, குதிரைகள் வளர்ப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். அவரின் தாய்  எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திருந்தவில்லை. அரசு நிர்வாகப் பொறுப்பை மகாராணி தன் கையில் எடுத்துக்கொள்ளவில்லையெனில், மக்கள் புரட்சி செய்ய நேரிடும் என அறிஞர்கள் எச்சரித்தும், திருந்தாத இளவரசனிடமிருந்து, பதவியைப் பறிக்க  விரும்பவில்லை மகாராணி.

குதிரைகள்மீது இளவரசருக்கு இருந்த ஈடுபாட்டை தெரிந்திருந்த மகாராணி, ஓர் உக்தியைக் கையாண்டார். அரபு நாட்டிலிருந்து, தாய், மகள் என மிக அழகான இரு பெண் குதிரைகளை வரவழைத்தார். அடுத்த நாள், இளவரசரை அழைத்த மகாராணி, 'இதில் எது தாய், எது மகள் என்று நீ கூறினால், இக்குதிரைகளை நீ எடுத்துக் கொள்ளலாம்' என்றார். குதிரைகளைப் பார்த்த இளவரசர் அதிசயித்துப் போனார். ஏனெனில், அவ்வளவு அழகாக, ஒரே தோற்றம் கொண்டிருந்தன, அக்குதிரைகள். இளவரசர் எவ்வளவோ முயன்றும் அவரால், தாய் எது? மகள் எது? என கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாளும் முயற்சி செய்த இளவரசர், தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். தாய் அவரை நோக்கி, நம் ஊர் ஆற்றுப் பக்கம் வா. யார் தாய், யார் மகள் என்று நான் காட்டுகிறேன்' எனக்கூறி மகனை ஆற்றுப்பக்கம் அழைத்துச் சென்றார். மகன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவ்விரு குதிரைகளையும் ஆற்று நீரில் தள்ளினார் தாய். தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின, அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதை கவனித்த மற்ற குதிரை, தான் நீந்துவதை விட்டு விட்டு, தத்தளித்த குதிரைக்கு உதவி செய்வது போல், அதை, கரை நோக்கித் தள்ளியது.

அதைக் கண்ட தாய், "மகனே, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய். உன் நலனில் அக்கறைக் கொண்டுதான், இந்த தள்ளாத வயதிலும் உன் வழிகளைச் சீராக்க பல வழிகளில் முயல்கிறேன். உன் தந்தை கட்டிக்காத்த அரசைக் கைவிட்டு, குடிமக்களைத் தத்தளிக்க விட்டுவிடாதே'' என்று கூறினார். அதைக் கேட்ட இளவரசருக்கு, உண்மை உறைக்க ஆரம்பித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி                           








All the contents on this site are copyrighted ©.