சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

உயிர் பிழைத்த கால்பந்தாட்ட வீரர்களுடன் திருத்தந்தை

உயிர் பிழைத்த Chapecoense Club கால்பந்தாட்ட வீரர்களை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை - ANSA

31/08/2017 16:39

ஆக.31,2017. ஆகஸ்ட் 30, இப்புதனன்று நடைபெற்ற பொது மறைக்கல்வி உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டிலிருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்கள் இருவரைச் சந்தித்தது, உணர்வுப்பூர்வமான நிகழ்வாக இருந்ததென்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த Chapecoense Club என்ற விளையாட்டுக் குழுவின் இளம் வீரர்கள், கொலம்பியா நாட்டில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ள, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி, பிரேசில் நாட்டிலிருந்து பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்தக் குழுவைச் சேர்ந்த 71 பேர் உயிர் துறந்தனர்.

அந்த விபத்தில் உயிர் பிழைத்த, Jackson Follmann மற்றும் Alan Ruschel என்ற இரு வீரர்கள், ஆகஸ்ட் 30, நடைபெற்ற புதன் பொது மறைப்போதகத்திற்குப் பின், திருத்தந்தையைச் சந்தித்தனர்.

இந்த விபத்தில் தன் கால்கள் இரண்டையும் இழந்த, 24 வயது இளையவர் Jackson Follmann அவர்களையும், Alan Ruschel அவர்களையும் திருத்தந்தை சிறப்பான முறையில் ஆசீர்வதித்தார்.

எங்களுக்கு மறுவாழ்வு தந்த இறைவனுக்கும், நாங்கள் இழந்துள்ள எங்கள் நண்பர்களுக்கும் பெருமைசேர்க்கும் வகையில் நாங்கள் வாழ விழைகிறோம் என்று இவ்விரு வீரர்களும், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.

Chapecoense Club அணியும், உரோமா அணியும், செப்டம்பர் 1, இவ்வெள்ளியன்று, உரோம் ஒலிம்பிக் திடலில் நட்பு கருதி நடைபெறும் கால்பந்தாட்ட விளையாட்டில் பங்கேற்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

31/08/2017 16:39