2017-08-31 16:39:00

சியேரா லியோனுக்கு உதவும் இயேசு சபையினர்


ஆக.31,2017. எபோலா நோயின் தாக்கத்திலிருந்து முற்றிலும் மீளமுடியாமல் தவித்துவரும் சியேரா லியோன் நாட்டில் நிகழ்ந்திருக்கும் நிலச்சரிவு மரணங்கள் பெரும் துயரத்தைத் தருகின்றன என்று, அப்பகுதியின் இயேசு சபை மாநிலத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவின் வடமேற்கு இயேசு சபை மாநிலத்தின் தலைவரான அருள்பணி Chukwuyenum Afiawari அவர்கள், ஆகஸ்ட் 13, 14 நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும், மக்களின் துயரங்களையும் எடுத்துரைத்து, மக்களுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.

உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினர் அனைவருக்கும், இன்னும் தங்கள் பணிகளில் ஆதரவு தரும் நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் தான் விண்ணப்பிப்பதாக, அருள்பணி Afiawari அவர்கள் கூறியுள்ளார்.

சியேரா லியோனே பகுதியில் பணியாற்றும் காரித்தாஸ் அமைப்பு, மேற்கு ஆப்ரிக்காவின் 15 நாடுகளில் இயங்கிவரும் காரித்தாஸ் அமைப்புக்களின் துணையோடு, முழு வீச்சில் பணியாற்றிவருவதாக, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி Alphonse Seck அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டியுள்ளதென ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.