2017-08-31 16:49:00

திருத்தந்தையின் முன்னிலையில் திருமண விருப்பம்


ஆக.31,2017. வெனெசுவேலா நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ள விழைந்த பெண்ணுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், திருத்தந்தையின் முன்னிலையில் தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 27, கடந்த ஞாயிறன்று, அகில உலக கத்தோலிக்கப் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு அவையின் உறுப்பினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்தித்துப் பேசினார்.

வியன்னா கர்தினால் Christoph Schönborn அவர்களின் முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அவையின்  உறுப்பினர்களில் ஒருவரான, Dario Ramirez என்ற அரசியல்வாதி, கர்தினால் அவர்களின் உத்தரவைப் பெற்றபின், திருத்தந்தையின் முன்னிலையில், தன் திருமண ஆவலை, தன் உடன்வந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

சூழ இருந்தோரை, குறிப்பாக, திருத்தந்தையின் மெய்காப்பாளர்களை பதட்டமடையச் செய்த இந்த நிகழ்வு, திருஅவை வரலாற்றுக்கு ஒரு புதிய முயற்சி என்று கர்தினால் Schönborn அவர்கள் கூறினார்.

இந்த நிகழ்வால் ஆச்சரியம் அடைந்த திருத்தந்தை, Dario Ramirez அவர்களையும், அவர் மணக்க விரும்பிய Maryangel Espinal அவர்களையும் ஆசீர்வதித்தார் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

உலகின் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு 2010ம் ஆண்டு வியன்னா கர்தினால் Christoph Schönborn, மற்றும், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் Lord David Alton ஆகியோரால் உருவாக்கப்பட்ட அகில உலக கத்தோலிக்கப் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு அவை, அரசியல் அரங்கில், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் இறுதி வாரத்தில், உரோம் நகரில், நான்கு நாட்கள் கூடி விவாதிக்கின்றது. அந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தையை சந்திக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.