2017-09-01 16:24:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் செய்தி


செப்.01,2017. படைப்பு என்ற மாபெரும் கோடைக்கு நன்றி சொல்ல, ஆர்த்தடாக்ஸ் உலகும், அனைத்து கிறிஸ்தவ உலகும் தங்கள் உள்ளங்களை இறைவன் பக்கம் திருப்பவேண்டும் என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

1989ம் ஆண்டு முதல், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையினர், செப்டம்பர் 1ம் தேதியை, படைப்பிற்காக நன்றி சொல்லும் நாளாகக் கடைப்பிடித்து வருவதை, தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், படைப்பின்மீது நாம் காட்டும் மதிப்பு, விவிலியத்திலிருந்து வரும் செய்தி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அளவுக்கதிகமாக படைப்பைப் பயன்படுத்தும் பொருளாதாரப் போக்கு, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது என்று, முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

படைப்பின் மீது நமது மதிப்பு குறைந்துவருவதுபோல், நம் அயலவர் மீதும் நம் மதிப்பு குறைந்துவருவதையும், அதனால் வளர்ந்து வரும் சமூக அநீதிகளையும் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள் கவலையுடன் எடுத்துரைத்துள்ளார்.

படைப்பின் மீது மரியாதையும், அயலவர் மீது அக்கறையும் வளர்வதற்கு, நல்மனம் கொண்ட அனைவரும் இணைந்து வரவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

1989ம் ஆண்டு முதல், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையில், செப்டம்பர் 1ம் தேதி, கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த உலக செப நாளில் கத்தோலிக்கத் திருஅவையும் இணையும் என்று, 2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.