2017-09-02 17:00:00

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் அமைதி


செப்.,02,2017. இறைவன் பிரசன்னத்தில் சகோதர சகோதரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும், வாழ்வு என்ற பயணத்தின் மற்றொரு படியாக, கொரிய மதத் தலைவர்களுடன் தன் சந்திப்பு இடம்பெறுவதாக, இச்சனிக்கிழமையன்று அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரியாவின் Gwangju உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Kim Hee-jong அவர்களுடன் தன்னை சந்திக்க வந்திருந்த கொரிய மதத்தலைவர்கள் அவையின் அங்கத்தினர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனைய மதங்களில் காணப்படும் ஆன்மீக மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை அங்கீகரித்து பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தை, திருஅவை தன் அங்கத்தினர்களுக்கு வலியுறுத்திவருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

பொதுநலனையும் அமைதியையும் நோக்கிய பாதையில் வரும் சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், மதங்களிடையே ஒத்துழைப்பும், கலந்துரையாடலும் இன்றியமையாதவை என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தகையப் பாதையில் மனம் திறந்த, அதேவேளை, ஒருவரையொருவர் மதிக்கும் கலந்துரையாடல்களின் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, வாழ்வதற்குரிய உரிமை, அடிப்படை சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், அமைதியைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்கு ஆற்றவேண்டிய பணிகளில், ஒருவரையொருவர் மதித்து இடம்பெறும் கலந்துரையாடல்கள் இன்றியமையாதவை என்றார்.

மனிதனின் புனித மாண்பு, ஏழ்மை, வன்முறை மறுப்பு, குறிப்பாக, கடவுள் பெயரால் இடம்பெறும் வன்முறைகளை அகற்றல், அநீதி, குடும்ப நெருக்கடி மற்றும் நம்பிக்கை இழத்தல் போன்றவற்றில், தீயவற்றை அகற்றி, உலகில் அமைதியை கட்டியெழுப்ப, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.