2017-09-04 15:40:00

பாசமுள்ள பார்வையில்... அன்பின் மறுஉருவம் அன்னை


கொல்கத்தாவில் அன்று, நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், பணவசதி இல்லாததால் ஏற்பட்ட காலதாமதத்தால், அந்தப் பெண் இறக்க நேர்ந்தது. தான் எதிர்கொண்ட இந்தக் கசப்பான அனுபவத்தால், சிறிய மருத்துவமனை ஒன்று ஆரம்பிப்பது என, அன்றே முடிவு செய்தார் புனித அன்னை தெரேசா. இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளைக் கொடுத்து உதவுங்கள், எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்”என்று உதவிக் கேட்டார் அன்னை தெரேசா. அன்னையவர்கள், அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தெரு தெருவாகப் போய் தர்மம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்குமுன் சென்று நின்று தர்மம் கேட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு, பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார் அன்னை தெரேசா. கடைக்காரர் அன்னையைக் கோபமாகப் பார்த்துவிட்டு, அன்னை தெரேசா அவர்கள் நீட்டியிருந்த கையில் எச்சிலைத் துப்பினார். அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!, நீங்கள் கொடுத்தது எனக்கு, என் காப்பகத்தில் தங்கியிருக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார் அன்னை. அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்”என்று கூறிவிட்டு, நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா அவர்கள் நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, தனது பயணத்திற்காகப் பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னைக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அன்னைக்கோ, சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை. அதேநேரம் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டார் அன்னை. அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்து, அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார் அன்னை.

கருவுற்றால் ஒரு குழந்தைக்குத்தான் தாய், கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறார் புனித அன்னை தெரேசா.

செப்டம்பர் 04, இத்திங்கள், அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு. செப்டம்பர் 05, இச்செவ்வாய், புனித அன்னை தெரேசா இறைவனடி சேர்ந்த இருபதாம் ஆண்டு நிறைவு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.