2017-09-05 15:30:00

அமைதியை நோக்கி முதல்படி எடுத்து வையுங்கள்


செப்.05,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 6  இப்புதன் முற்பகலில் கொலம்பிய நாட்டிற்குத் திருத்தூதுப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளவேளை, அந்நாட்டு மக்களுக்கு, காணொளி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும், அதற்குத் தயாரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, அயலவரோடு உறவு கொள்வதற்கு எடுக்கும் முயற்சியில், முதலில் அமைதியை நோக்கி முதல்படி எடுத்து வையுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“முதல்படி எடுத்து வைப்போம்” என்ற, இத்திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருளை மையப்படுத்திப் பேசியுள்ள திருத்தந்தை, பாலங்களைக் கட்டுவதற்கும், ஒருமைப்பாட்டுணர்வை உருவாக்குவதற்கும், முதலில் அன்புகூர வேண்டுமென்பதை, இக்கருப்பொருள் வலியுறுத்துகின்றது என்று தெரிவித்துள்ளார்.

கொலம்பிய நாடு, நீண்ட காலமாக அமைதிக்காக ஏங்கி, அதற்காக உழைத்திருக்கின்றது, இந்த உழைப்பு, நிலைத்த அமைதியைக் கொணர்வதாக அமைய வேண்டுமென்றும், இதன் வழியாக, ஒவ்வொருவரையும், பகைவர்களாக அல்லாமல், உடன்பிறந்தவர்களாகப் பார்த்து, நடத்தமுடியும் என்றும், திருத்தந்தை, இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நம் எல்லாரையும் அன்புகூர்ந்து, ஆறுதலளிக்கும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள் என்பதை, அமைதி நினைவுபடுத்துகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, வரலாற்றிலும், கலாச்சாரத்திலும், விசுவாசத்திலும் வளமையான இந்த நாட்டிற்கு வருவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிற்கு, செப்டம்பர் 6, இப்புதனன்று செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, செப்டம்பர் 11ம்   தேதியன்று வத்திக்கான் திரும்புவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.