2017-09-05 15:25:00

பாகிஸ்தான் தலத்திருஅவை - திருநற்கருணை ஆண்டு


செப்.05,2017. கிறிஸ்தவர்களின் வாழ்விலும், குடும்பங்களிலும், இல்லங்களிலும் திருநற்கருணை மையமாக அமைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், 2018ம் ஆண்டை, திருநற்கருணை ஆண்டு என அறிவிப்பதற்குத் தீர்மானித்துள்ளது, பாகிஸ்தான் தலத்திருஅவை.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் திருவழிபாட்டு ஆணைக்குழுவின் தலைவரான முல்டான் ஆயர் Benny Travas அவர்கள், இத்தகவலை, பீதேஸ் செய்தி நிறுவனத்திடம் அறிவித்தார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்ற உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவுக்கு கிடைத்த உள்தூண்டுதலின் பயனாக, பாகிஸ்தானில், 2018ம் ஆண்டை திருநற்கருணை ஆண்டு என அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டது எனவும், ஆயர் Travas அவர்கள் தெரிவித்தார்.   

"நானே வாழ்வு தரும் உணவு" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் திருநற்கருணை ஆண்டின் தொடக்க விழா, வருகிற நவம்பர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, கராச்சி புனித பேட்ரிக் பேராலயத்தில் நடைபெறும். இவ்வாண்டின் நிறைவு நிகழ்வு, 2018ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை இலாகூரில் நடைபெறும்.

குடும்பங்கள், பள்ளிகள்,  இளையோர், சிறார் என எல்லாருக்கும் மறைக்கல்வி, ஒவ்வொரு பங்கிலும் திருநற்கருணை ஆராதனை, உட்பட பல திட்டங்கள் திருநற்கருணை ஆண்டில் செயல்படுத்தப்படும் எனக் கூறினார், ஆயர் Travas.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.