2017-09-06 15:49:00

கிறிஸ்தவ விருந்தோம்பலின் உயிர் நாடி, ஏற்றுக்கொள்ளுதல்


செப்.06,2017. அந்நியர் மூவருக்கு ஆபிரகாம் தன் வீட்டில் விருந்தளித்ததை, மூவொரு இறைவனுக்கு அளித்த விருந்தென, கிறிஸ்தவ பாரம்பரியத்தில் கருதி வருகிறோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

'விருந்தோம்பல் என்ற கொடை' என்ற தலைப்பில் போஸே துறவுமடத்தில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” (மத்தேயு 10:40) என்று இயேசு கூறிய சொற்கள், கிறிஸ்தவ விருந்தோம்பலின் உயிர்நாடியாக விளங்குகிறது என்று, கர்தினால் கோக் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்மாவு சென்ற சீடர்கள், வழியில் இயேசுவைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டே நடந்ததைப்போல், போஸே துறவு மடத்தில் நிகழும் பன்னாட்டுக் கருத்தரங்கிலும் இயேசுவை இன்னும்  ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழவேண்டும் என்று, கர்தினால் கோக் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.