2017-09-07 15:57:00

டிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்


செப்.07,2017. நாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, முன்னேற்றத்தை நோக்கிய வழியில் பின்னோக்கிச் சென்றுள்ளது மட்டுமல்லாமல், விவிலியப் பாதையை விட்டும் விலகியுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

பாரக் ஒபாமா அவர்கள் அரசுத்தலைவராக இருந்த வேளையில், குழந்தைகளாக, இளையோராக அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கிய DACA என்ற திட்டத்தை, தற்போதைய அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் நீக்க முடிவு செய்துள்ளதை, ஆயர்கள் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.

ஒபாமா அவர்களின் திட்டத்தின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தஞ்சம் புகும் இளையோர், தங்கள் கல்வியைத் தொடரவும், வேலை வாய்ப்புக்களைத் தேடிக்கொள்ளவும் வசதிகள் செய்து தரப்பட்டதை, தற்போதைய அரசு நீக்குவதாக, செப்டம்பர் 6, இப்புதனன்று அறிவித்திருப்பது, இளையோரின் உள்ளங்களை நொறுக்கும் ஒரு முயற்சி என்று ஆயர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ, துணைத் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் மற்றும் ஏனைய ஆயர்கள் இணைந்து கையொப்பமிட்டுள்ள இந்த அறிக்கையில், டிரம்ப் அவர்களின் அரசு, மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனும், எவ்வித இரக்கமும் இன்றி செயல்படுவது வேதனையைத் தருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.