2017-09-11 16:12:00

கார்த்தஹேனா இறுதி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


செப்.11,2017. அன்பு சகோதர சகோதரிகளே! இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க முக்கிய பங்கு வகித்து, வீரத்துவ நகராக விளங்கிய இங்கு, கொலம்பிய திருத்தூதுப் பயணத்தின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றுகிறேன். கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக கார்த்தஹேனா தே இன்டியாஸ் என்ற இந்நகரம், மனித உரிமைகளின் தலைநகராகவும் விளங்குகிறது. ஒடுக்கப்பட்டோர், குறிப்பாக, அடிமைகளின் உரிமைகளுக்குப் போராடுவதற்கென இயேசுசபை அருள்பணியாளர்களாலும் பொதுநிலையினராலும் இங்கு 17ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குழுவுக்கு நன்றி கூறுகிறேன். கொலம்பிய மனித உரிமைகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் இந்த புனித பீட்டர் கிளேவர் திருத்தலத்தில், மன்னிப்பு, திருத்தம், சமூகம், மற்றும் செபம் குறித்து, இறைவனின் வார்த்தைகள்  நம்மிடம் பேசுகின்றன.

காணாமல் போன ஓர் ஆட்டைத் தேடிச்செல்ல, தன் 99 ஆடுகளையும் விட்டு விட்டுச் சென்ற நல்லாயனைக் குறித்து இயேசு சொல்கிறார். நம் அக்கறை, மன்னிப்பு, அருகாமை என்ற எல்லைகளைத் தாண்டி, தொலைந்து போனவர்கள், கைவிடப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. தங்களுக்கு பெரும் தீங்கிழைத்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்ட மனிதர்களை இந்த திருத்தூதுப் பயணத்தின் கடந்த நாட்களில் நாம் சந்தித்தோம். அவர்களின் சாட்சியங்களுக்கு செவிமடுத்தோம். பழிவாங்கும் உணர்வுகளையும் தாண்டி, பகுத்தறிவைப் பயன்படுத்தும் வழிகளால் அமைதியை உருவாக்கமுடியும் என்பதையும் கற்றுக் கொண்டோம்.

அரசியலுக்கும் சட்டத்திற்கும் இடையே நிலவும் இணக்க வாழ்வும், மக்களின் ஈடுபாடும் இங்கு தேவைப்படுகின்றன. அமைதி என்பது, அமைப்புமுறைகளால் பெறப்படுவது அல்ல, ஆனால் அதை ஒருவரொருவருக்கிடையே இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்களால் பெறமுடியும். கொலம்பிய நாடு எடுத்துவைக்க முயலும் புதிய பாதைக்கு நாமனைவரும் பங்களிக்கமுடியும். குணப்படுத்தும் சந்திப்புக்களுக்கு இணையாக, வேறு எதையும் இட்டு நிரப்பமுடியாது. சந்திப்பது, விளக்கமளிப்பது, மன்னிப்பது என்ற சவால்களிலிருந்து, வேறு எதுவும் நம்மைத் தள்ளி வைக்க முடியாது. வரலாற்றுக் காயங்களை அகற்ற, நீதி வழங்கப்படுதலும், பாதிக்கப்பட்டோர் உண்மையை அறிவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படலும், தவறுகள் திருத்தப்படலும், அதே தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்குத் தேவையான அர்ப்பணமும் தேவை.

அடிமட்ட கலாச்சார மாற்றம் இடம்பெறவேண்டும். வன்முறை மற்றும் மரணக் கலாச்சாரத்தை, வாழ்வு மற்றும் சந்திப்பின் கலாச்சாரமாக மாற்றுவது, கிறிஸ்தவப் பதில்மொழியாக இருக்கவேண்டும். நாம் இந்த அமைதிக்கு என்ன பங்காற்றியுள்ளோம்? புனித பீட்டர் கிளேவர், அடிமை மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கவும், அவர்களின் மாண்பைக் காக்கவும் உதவியுள்ளார். மனித வாழ்வின் புனிதத்துவத்திற்கு மதிப்பு, உலகளாவிய உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை, சரியானமுறையில் புரிந்துகொண்டு, அவற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்ட மனிதகுலத்தின் பொதுவான வீடு இருக்கவேண்டும். இந்த நாட்டின் போதைப்பொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் அழிவு, மாசுக்கேடு, தொழிலாளர் சுரண்டப்படல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள், மக்களை ஏழ்மையில் தள்ளுதல், பாலியல் தொழில், மனிதர்கள் சந்தைப் பொருட்கள்போல் கடத்தப்படுதல், சிறார்களுக்கு எதிரான உரிமை மீறல்கள், அடிமைத்தனம், சுரண்டப்படும் குடியேற்றதாரர், என அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். பிறரன்பை உள்ளடக்கிய நீதியின் கொள்கைகளுடன் சமூக அடித்தளம் இடப்படவேண்டும் என்பதை உணர்வோம்.

நாம் ஒன்றிணைந்து செபிக்கவேண்டும் என இயேசு விரும்புகிறார். நம் செபங்கள் ஒரே குரலாக எழட்டும். தவறிழைத்தவர்களின் அழிவுக்காக அல்ல, மாறாக, அவர்கள் மீட்கப்படுவதற்கும், பழி வாங்கலுக்காக அல்ல, மாறாக, நீதிக்கும், அழிப்பதற்கு அல்ல, மாறாக, உண்மையின் வழி குணப்படுத்தப்படுவதற்கும் செபிப்போம்.

'நம் முதலடியை எடுத்து வைப்போம்' என்ற இத்திருத்தூதுப்பயண விருது வாக்கு நிறைவேற்றப்பட செபிப்போம். முதலடி எடுத்து வைப்பது என்பது, நம்மை விட்டு வெளியே வந்து, பிறரை, இயேசுவோடு இணைந்து சந்திப்பதாகும். நீடித்த அமைதி வேண்டுமெனில், கொலம்பியா இப்பாதையில் செல்லவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், இன்று தேவைப்படுவது, அமைதியை கட்டியெழுப்பும் பணி. நம்மால் இயலாததை இறைவன் நமக்கு ஆற்றமுடியும். உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன் என உரைத்த இயேசு, நம் அனைத்து முயற்சிகளுக்கும் பலனளிப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.