2017-09-11 15:38:00

திருத்தந்தையின் கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு


செப்.11,2017. “முதல் அடியை எடுத்து வைப்பது” என்பது, ஆண்டவராம் கிறிஸ்துவோடு மற்றவரைச் சந்திக்கச் செல்வதாகும். அன்பு கொலம்பிய சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நன்றி. இந்நாள்களில் எனது இதயத்தைத் தொட்ட ஏராளமான மக்களைச் சந்தித்தேன். நீங்கள், நன்மையின் உலகை எனக்கு காட்டியிருக்கின்றீர்கள் என்ற டுவிட்டர் செய்திகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, செப்டம்பர் 11, இத்திங்கள் உரோம் நேரம் பகல் 12.55 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் மாலை 4.25 மணிக்கு உரோம் வந்து சேர்ந்தார். வரும்வழியில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று Salus Populi Romani அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்து மலர்களை காணிக்கையாக்கினார் திருத்தந்தை. தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மேற்கொண்ட ஐந்து நாள்கள் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, கொலம்பியாவின் கார்த்தஹேனா (Cartagena) Rafael Nunez விமான நிலையத்திலிருந்து உரோம் நகருக்குப் பயணம் செய்த பத்து மணி நாற்பது நிமிட நேரத்தில், தன்னோடு பயணம் செய்த பல நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லி, இப்பயண நாள்களில் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விமானப் பயணத்தில், கொலம்பியா, ஹாலந்து நாட்டின் Antille தீவு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oceano மற்றும் Puerto Rico, போர்த்துக்கல் நாட்டின் Azzorre தீவு, இஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி நாடுகளைக் கடந்து வந்தார் திருத்தந்தை. இந்நாடுகளைக் கடந்துவந்தபோது, இந்நாடுகளின் தலைவர்களுக்கு தனது வாழ்த்தும் செபமும் நிறைந்த தந்திச் செய்திகளையும் அனுப்ப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறக்கவில்லை.

செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதிநரை இடம்பெற்ற திருத்தூதுப்பயண நாள்களில், திருத்தந்தை அழைப்பு விடுத்ததற்குக் கீழ்ப்படியும் விதமாக, கடந்த நாள்களில் கொலம்பியாவில், கொலைகள் அறுபது விழுக்காடு குறைந்துள்ளன என, விமான நிலையத்தில் அரசுத்தலைவர் திருத்தந்தையிடம் கூறியுள்ளார். மேலும், இப்பயணத்திற்குப்பின் கொலம்பியா முன்னேறியுள்ளது, நாட்டில் அமைதியை நிலைநிறுத்த, ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் தொடர்ந்து உழைப்பேன், கொலம்பியாவை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து செபியுங்கள் என, திருத்தந்தையிடம் அரசுத்தலைவர் சாந்தோஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கொலம்பியாவில் ஒவ்வொரு நாளும் ஐம்பது கொலைகள் வீதம் இடம்பெறும் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதுபோல், கொலம்பிய மக்கள் என்றென்றும் அமைதியின் அடிமைகளாகச் செயல்படுவார்களாக. நாமும் அமைதி, மன்னிப்பு, ஒப்புரவின் கருவிகளாக என்றென்றும் செயல்படுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.