சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

பாசமுள்ளப் பார்வையில்…............, : தலை சாய்க்க இடம் தா!

தன் சகோதரியை ஆறுதல்படுத்தும் ஓர் அகதி - REUTERS

13/09/2017 16:22

அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள், அவன் தாய் அவனிடம் கேட்டார், ‘மகனே, உன் உடம்பில் முக்கியமான உறுப்பு என்று எதைக் கருதுகிறாய்?’ என்று. அவன் சொன்னான், ‘அம்மா, அது என் காதுதான். ஏனென்றால், அதன் வழியாகத்தானே நீங்கள் பேசுவதை நான் கேட்க முடிகிறது’ என்று. ‘அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது’, என்று கூறிவிட்டு விடை சொல்லாமலேயே மௌனம் காத்தார் அத்தாய். ஓர் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே கேள்வி அவனிடம் கேட்கப்பட்டது. ‘கண்தான் முக்கியம்’, என்றான் அவன். தவறு என்று கூறிய தாய், ‘விடை தேடிக்கொண்டேயிரு’ எனக் கூறி அமைதியானார். அவனுக்கு 11 வயதிருக்கும்போது அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. 'நாக்கு’ எனக் கூறி, ‘இது இல்லையென்றால் உங்களுடன் பேச முடியாதே’ என்றான் மகன். ‘அதைவிடவும் உயர்ந்தது ஒன்றுண்டு’, எனக் கூறிய தாய் மௌனமானார். 15 வயதில் அதே கேள்வி கேட்கப்பட்டபோது, ‘வாழ்வதற்கு உதவும் மூச்சுக்காற்றை இழுக்கும் மூக்கா, இரத்தத்தை அனுப்பும் இதயமா, அல்லது மூளையா’ என இவனே தாயைப் பார்த்து கேள்வியைக் கேட்டு உண்மையை அறிய விரும்பினான். 'இவைகளும் முக்கியம்தான், ஆனால், இவைகளைவிட முக்கியமான ஒன்று உள்ளது’ என்று கூறினார் தாய். அவனின் 20ம் வயதில் அவன் தாத்தா காலமானார். அவரின் உடலருகே கண்ணீரோடு நின்ற தாய், அவனை நோக்கி வந்தார். அவன் அருகே வந்து மெதுவாக, ‘மகனே, இப்போதாவது தெரிகிறதா உடலின் முக்கிய உறுப்பு எதுவென்று’, எனக் கேட்டார். மகனுக்கோ அந்த துக்கத்திலும் ஆச்சரியமாக இருந்தது. இந்த துக்க நேரத்தில் இப்படி ஒரு கேள்வியா, என்று. தாயே பதிலைக் கூறினார். 'மகனே, ஒவ்வொருவருக்கும், தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், சாய்ந்து அழவும் ஒரு தோள் வேண்டும். ஒரு தாயின், தந்தையின், சகோதரனின், சகோதரியின், தோழனின் உறவினர்களின் துயர்களை ஏற்றுக்கொண்டு, தலைசாய்த்து அழ உன் தோள்களில் இடம்கொடுக்க முடியும். உனக்கும் பல நேரங்களில் அழ ஒரு தோள் தேவைப்படும். தோள் கொடுப்பான் தோழன் என நீ கேள்விப்பட்டதில்லையா?. எல்லா உறுப்புக்களுமே சுயநலத்திற்காகப் பயன்பட, தோள்தான் பிறர் தலை சாய்க்க உதவுவதாக உள்ளது. ஆகவே, அதுதான் என்னைப் பொறுத்தவரையில் உயர்ந்த உறுப்பு’, என்ற தாய், அவன் தோள்களில் சாய்ந்து அழுதார்.

ஆம். மரணத்துயர்களை எவராலும் குணப்படுத்த முடியாதுதான்,

அதேவேளை, அன்பின் நினைவுகளை எவராலும் திருடவும் முடியாது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

13/09/2017 16:22