2017-09-13 16:49:00

சாம்பலில் பூத்த சரித்திரம்:உரோமை ஆட்சிக்கு வெளியே கிறிஸ்தவம்


செப்.13,2017.  கிறிஸ்தவத்தின் வரலாற்றை தொடக்கத்திலிருந்தே நாம் வாசிக்கும்போது இயேசுவின் பாதையில் நடப்பதற்கு எத்தனையோ கிறிஸ்தவர்கள் துணிச்சலான பாதையைத் தேர்ந்துகொண்டுள்ளதை அறிய முடிகின்றது. இதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இன்றும் பல நாடுகளில், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்படுகின்றனர். அதேநேரம், கிறிஸ்தவத்தில் அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. நாம் எல்லாரும் அறிந்த, அண்மையில் தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு, கிறிஸ்துவின் விழுமியங்களுக்குச் சான்றுபகரும் பாதையில், கிறிஸ்தவர்கள் துணிச்சலுடன் செல்கின்றனர் என்பதையே காட்டுகின்றது.

இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில், நீட் தேர்வைப் புறக்கணிப்பதாக, வேலூர் கிறிஸ்தவ கல்லூரி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது, உண்மையிலேயே கிறிஸ்துவின் விழுமியங்களுக்குச் சாட்சி சொல்வதாக அமைந்துள்ளது. ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், 1900ம் ஆண்டு அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர் டாக்டர் Ida S. Scudder அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவ கல்லூரியும், மருத்துவமனையும், இந்திய அளவிலும், உலக அளவிலும் மிகவும் மதிக்கப்படும் மருத்துவத்துறைகளில் ஒன்று.  இந்தியாவில் சிறப்பான மருத்துவ கல்லூரிகளில் ஒன்ராகவும் இது போற்றப்பட்டு வருகிறது. CMC வேலூர் என அழைக்கப்படும் இம்மருத்துவ கல்லூரி, 1946ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் செவிலியர் பயிற்சி கல்லூரியை ஆரம்பித்தது. உலகிலே முதன்முதலில் தொழுநோயுற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்த(1948) பெருமை, இந்தியாவில் முதன்முதலாக திறந்த இதய அறுவை சிகிச்சையை (1961),  வெற்றிகரமாகச் செய்த பெருமை, இந்தியாவில் முதன்முதலாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை (1971) செய்த பெருமை, இந்தியாவில் முதன்முதலாக எலும்பு மஜ்ஜை (1986) செய்த பெருமை.. இப்படி பல பெருமைகளைக் கொண்டிருக்கும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும், சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சி.எம்.சி. கவுன்சில் தெரிவித்துள்ளது. இக்கல்லூரி இவ்வாறு தீர்மானித்துள்ளது என்றால், இயேசுவின் போதனைப்படி செல்வதற்கு எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். இயேசுவைப்போல், இதில் என்ன இன்னல் வந்தாலும் அதை ஏற்கத் தயாராக இருக்கின்றது வேலூர் CMC மருத்துவ கல்லூரி. 

இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் முதலில் எருசலேமில் பரவத் தொடங்கிய கிறிஸ்தவம், எருசலேமிலேயே தேக்கம் அடையவில்லை. தொடக்க காலத்திலேயே உரோமைப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் பரவியது. இயேசு பிறந்த பாலஸ்தீனாவில் தனது தொடக்கத்தைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவம், முதல் நூற்றாண்டிலேயே மற்ற கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. உரோமைப் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கும், அதற்கு வெளியேயும் கிறிஸ்தவம் எவ்வாறு பரவியது என்பதை, திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்துள்ளது. இயேசுவின் திருத்தூதர் பணிகள் மற்றும் கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுத்த மறைசாட்சிகளின் சாட்சியங்களால் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. ஐரோப்பியக் கண்டத்தில் என்ன வேகத்தில் கிறிஸ்தவம் பரவியதோ, அதே வேகத்தில் ஆசியக் கண்டத்திலும் பரவியது. உரோமைப் பேரரசு அமைத்த நல்ல தரைவழி, கடல்வழிப் பாதைகள், வர்த்தகத் தொடர்புகள், துறைமுக நகரங்கள், கல்வி மையங்கள் போன்றவை, உலகெங்கும் கிறிஸ்தவம் பரவியதில் முக்கிய பங்காற்றின. இதன்வழியாக, பல்வேறு சூழல்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினர்.

அதேநேரம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறைகளும் கிரிஸ்தவம் பரவ மிகவும் உதவின. பேரரசர் கான்ஸ்ட்ட்டைன் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியபின், இம்மதம் உலகின் பல்வேறு திசைகளுக்கும் சென்று மிக ஆழமாக வேரூன்றியது. இவ்வாறு பரவியதில் முக்கியமான இடம் பெர்சியா. அதாவது அக்கால பாரசீகம். பெர்சியாவில், தொடக்கத்தில் செசானியன் பேரரசின் (Sassanid, Sasanian Empire), அரசர்கள் கிறிஸ்தவர்களிடம் மிகவும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டாலும், சமய மற்றும் அரசியல் காரணங்களால், கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள், குறிப்பாக, அரசர் 2ம் சப்போர் (Saphor II) காலத்தில் இந்த அடக்கமுறைகள் இடம்பெற்றன. பெர்சியாவில் கிறிஸ்தவம் எவ்வாறு பரவியது?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.