2017-09-13 16:49:00

ரோஹிங்கியா மக்களுடன் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு


செப்.13,2017. மியான்மாரில், ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் தாக்குதல்களால் துன்புறும்வேளை, இம்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை.

பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை சார்பில், அப்பேரவையின் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ், அப்பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் அர்ஷத் ஆகிய இருவரும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரின் ஆங் சான் சூச்சி அவர்கள், அமைதியின் கலங்கரை விளக்கமாகவும், ரோஹிங்கியா மக்களின் உரிமையாகவும் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் ஆயர்கள், Rakhine மாநிலத்தில் நடத்தப்படும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு, மியான்மார் சனநாயக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரோஹிங்கியா மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை எடுத்துச் செல்ல மனிதாபிமான நிறுவனங்களுக்கு வழியமைக்கவும் உதவும் வகையில், மியான்மார் அரசுடன், பன்னாட்டு சமுதாயமும், பாகிஸ்தான் அரசும் உரையாடலைத் தொடங்குமாறு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆயுத மோதல்கள் இடம்பெறும் பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள், பங்களாதேஷில் அடைக்கலம் தேடியுள்ளனர். பெண்கள், சிறார் உட்பட குறைந்தது இருபதாயிரம் பேர் மலைப்பகுதிகளுக்குச் சென்று உணவும், தண்ணீருமின்றி கஷ்டப்படுகின்றனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, உலக நாடுகள், தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மனிதாபிமான அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.