2017-09-14 16:44:00

சுத்தக்குடிநீரை பெறுவது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை


செப்.,14,2017. மனித குலத்திற்கும் இயற்கைக்கும் எதிரான தீங்குகள் ஒவ்வொரு நாளும் இழைக்கப்பட்டுவரும் இந்நிலையில், குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்தவைகளை மனித உரிமையாக ஏற்றுக்கொண்டு புது விதிகள் படைக்க உலகம் முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.

பாதுகாப்பான குடிநீரும் சுகாதாரமும், மனித உரிமைகள் என்ற தலைப்பில் ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஒன்றிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், சுத்தக் குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழி செய்வதே, ஒன்றிணைந்த மனித குல மேம்பாட்டிற்கு உதவுவதாக இருக்கும் என்றார்.

வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீர் ஒரு சிலருக்கு மட்டும் எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாகவும், மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டதாகவும் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் கூறினார் கர்தினால்.

வாழ்வுக்கு தேவையான காற்றும் தண்ணீரும், மனிதகுலம் மற்றும் அனைத்து உயிரினங்களின் பொதுச் சொத்தாக நோக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால், பாதுகாப்பான தண்ணீரைப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமையை திருஅவை பல காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

குடிநீருக்கும் மனித உரிமைகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பையும் எடுத்துரைத்த கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள்,  அண்மைக் காலங்களில் ஐ.நா. அமைப்புக்கள் இது தொடர்பாக எடுத்துவரும் நல் முயற்சிகள் குறித்த திருப்பீடத்தின் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

சுத்தக்குடிநீரை பெறுதல் என்பது, எவ்வாறு மனித உரிமையாக மாறுகிறது என்பது குறித்தும், மனித குலம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறித்தும், தன் உரையில் மேலும் விளக்கினார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.