2017-09-14 15:52:00

திருத்தந்தை : கிறிஸ்துவின் சிலுவை அன்பின் மறையுண்மை


செப்.14,2017. சிலுவையின் வழியாக அறியப்படும் அன்பின் மறையுண்மை குறித்து, திருச்சிலுவையின் மகிமை விழாவான, இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோடை விடுமுறைக்குப் பின் இவ்வியாழனன்றே, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் பொதுமக்களுடன் இணைந்து காலைத் திருப்பலியை நிகழ்த்தத் துவங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சிலுவை திருவிழாவை மையமாக வைத்து, தன் மறையுரைச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிலுவையைக் குறித்து புரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல, ஆழமான தியானத்தின் வழியாகவே அன்பின் மறையுண்மையை புரிந்துகொள்ள முடியும், என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை, கீழிருந்து வானகம் நோக்கி அழைத்துச் செல்ல இயேசு வானகத்திலிருந்து கீழே இறங்கி வந்ததே அன்பின் மறையுண்மை எனவும் கூறினார்.

அன்பிற்காக அனைத்தையும் துறந்து, தன்னையே தாழ்த்தி, தன் நிலையை விட்டு கீழிறங்கி வந்து, சிலுவைச் சாவு வரை கீழ்ப்படிபவராக இருந்த இயேசுவை, இறைவன் மேலுலகிற்கு உயர்த்தினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சியில் இறுதி எல்லை வரை கீழிறங்கிச் செல்வதைப் புரிந்துகொண்டோமானால், இயேசு நமக்கு வழங்கும் அன்பின் மறையுண்மை தரும் மீட்பை புரிந்துகொள்வோம் எனவும் உரைத்தார்.

ஒருபாதியை மட்டும் எடுத்துக்கொண்டு, மறுபாதியை விட்டுவிடும் இன்றைய நிலைகள் போல், நாமும் இயேசுவை விலக்கிவிட்டு சிலுவையையும், சிலுவையை விலக்கி விட்டு இயேசுவையும் மட்டும் எடுத்துக் கொள்ளும் சோதனைகள் வரலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையில்லாத இயேசு, வெறும் ஆன்மீகக் குருவாகவே நோக்கப்படுவார் என்றார்.

இயேசு இல்லாத சிலுவை என்பது, நம் நம்பிக்கையை இழக்க வைத்துவிடும், ஏனெனில், நம் பாவச்சுமைகள் நம்மை அழுத்தி சோர்வடைய வைத்துவிடும் எனவும் கூறினார் திருத்தந்தை.

சிலுவையின்றி இயேசுவையும், இயேசு இன்றி சிலுவையையும் நாம் கொண்டிருக்க முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவை வெறும் ஆலோசகராக, குருவாக மட்டும் நோக்குகிறோமா, அல்லது, நம் துன்பங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறோமா, அல்லது, நம்மையே வெறுமையாக்கி கடவுளை நோக்கி மேலெழும்பிச் செல்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்,

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.