2017-09-14 16:16:00

பாசமுள்ள பார்வையில்.. தாயின் ஆழமான விசுவாசம்


பிரபல புற்றுநோய் சிறப்பு மருத்துவரான மாற்கு அவர்கள், தனது அரிய மருத்துவக் கண்டுபிடிப்பிற்காக அறிவிக்கப்பட்டிருந்த விருது ஒன்றைப் பெறுவதற்காக, விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அது புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், பக்கத்து விமான நிலையத்தில் தரை இறங்கியது. வேறு வழியின்றி, வாடகைக்கு, கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் மருத்துவர். அச்சமயத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, புயல் உண்டானது. கனமழை பெய்ததால் அவரால் காரை ஓட்ட இயலவில்லை. இரண்டு மணிநேரம் காரை ஓட்டிய பின்புதான், தான் வழி மாறியதை உணர்ந்தார் அவர். இளைப்பாறுவதற்கு இடம் தேடி, ஒரு வீட்டைக் கண்டு, கதவைத் தட்டினார் அவர். அங்கு ஓர் ஏழைப் பெண் கதவைத் திறந்தார். அப்பெண்ணிடம் தன் நிலையைக் கூறி, அவரது தொலைப்பேசியை பயன்படுத்துவற்காக உதவி கேட்டார் மருத்துவர். அப்பெண்ணோ, தன்னிடம் தொலைப்பேசி இல்லை, வேண்டுமானால் மழை நிற்கும்வரை தன் வீட்டில் இருந்துவிட்டு போகுமாறு கேட்டுக்கொண்டார். பின், மருத்துவருக்கு குடிப்பதற்கு டீயும், பிஸ்கட்டும் கொடுத்துவிட்டு, செபிக்கத் தொடங்கினார். அப்பெண் செபிப்பதைப் பார்த்த மருத்துவர், உனக்கு கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அப்பெண், “தொட்டிலில் கிடப்பது என் மகன். அவனை ஒரு புதுவிதமான புற்றுநோய் தாக்கியுள்ளது. இதற்கு மருந்து, மருத்துவர் மாற்கு என்பவரிடம் மட்டும்தான் உள்ளதாம். அவரால்தான் சிகிச்சையும் அளிக்க முடியுமாம். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. அவரும் வேறு ஊரில் இருக்கிறார், என் தேவன், என் வேண்டுதலை இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் கைவிடமாட்டார். ஏதாவது ஒரு வழிகாட்டுவார், நான் அவர் மீது உள்ள நம்பிக்கையை கைவிட மாட்டேன்” என்று கூறினார். மருத்துவர் மாற்கு, அதிர்ச்சியில் உறைந்துபோனார். அந்நாளில் தனக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். அந்தக் குழந்தைக்கு இலவசமாக சிகிச்சையும் அளித்தார். அந்தத் தாயின் ஆழமான விசுவாசத்தைக் கண்டு வியந்தார்.

இது ஓர் உண்மைச் சம்பவம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.