2017-09-14 16:38:00

ரொஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. உதவிகள்


செப்.,14,2017. கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் பங்களாதேஷிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் தேடி வருவதாகவும், வெளியேறும் மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது, யுனிசெஃப் அமைப்பு.

ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் இடப்பற்றாக்குறை மட்டுமல்ல, குடிதண்ணீர், உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக உரைக்கும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு, தண்ணீரால் பரவும் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது எனவும் கூறுகிறது.

பங்களாதேஷில் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா குழந்தைகளுக்கு தேவையான உணவு, குடிநீர், சவக்காரம், துணிகள், செருப்புகள் போன்றவைகளை வழங்கிவரும் யுனிசெஃப் அமைப்பு, பங்களாதேஷ் குடிநீர் விநியோக அதிகாரிகளுடன் இணைந்து,  நீர் சுத்திகரிப்புப் பணிகளிலும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 மாதங்களுக்கு ரொஹிங்கியா குழந்தைகளுக்கான அவசர கால உதவிகளுக்கு 73 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாகவும் அறிவித்துள்ளது யுனிசெஃப்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.