சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பாகிஸ்தான் பள்ளிகளில் சகிப்பற்றதன்மை நிறுத்தப்பட அழைப்பு

பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் - AFP

15/09/2017 16:07

செப்.15,2017. பாகிஸ்தானில், கல்வி அமைப்பின் தரத்தை முன்னேற்றுவதைக் காட்டிலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும், பள்ளிக் கட்டடங்களைப் பாதுகாப்பதிலே மிகுந்த ஆர்வம் காட்டப்படுகின்றது என்று, அந்நாட்டு அரசைக் குறைகூறியுள்ளனர் ஆயர்கள்.

பாகிஸ்தானில், உயர்நிலைப் பள்ளி மாணவரான ஷரோன் மாசிஹ் (Sharon Masih) என்ற 17 வயது நிரம்பிய கிறிஸ்தவ இளைஞர், தனது வகுப்பு மாணவர்களால் அண்மையில் கொலைசெய்யப்பட்டதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஆயர்கள், இந்த இளைஞரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் சகிப்பற்றதன்மை நிறுத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீது, ஏனையோர் கொண்டிருக்கும் சகிப்பற்றதன்மை, பாகுபாடு, மனிதமற்ற போக்கு ஆகிய காரணங்களால், இந்த மாணவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும், அவ்வறிக்கை கூறியுள்ளது.

Burewala நகரிலுள்ள M.C. அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்த ஒருசில நாள்களில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியன்று, மாணவர் ஷரோன் மாசிஹ், தனது வகுப்பு மாணவர்களால் கேலிசெய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த வகுப்பில் எழுபது மாணவர்கள் உள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

15/09/2017 16:07