2017-09-16 16:00:00

இயேசுவின் திரு இருதய நற்செய்தி சபையினருடன் திருத்தந்தை


செப்.16,2017. இயேசுவின் திரு இதய பக்தி முயற்சிகளை பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயேசுவின் திரு இருதய நற்செய்தி சபை, இயேசுவின் கருணைநிறை அன்பின் சாட்சிகளுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திரு இருதய நற்செய்தி சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 85 பிரதிநதிகளை இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பொது அவை தயாரிப்பிற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பான ' நல்ல இரசத்தை இதுவரை வைத்திருத்தல்' என்பது குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 150 ஆண்டுகளாக இத்துறவு சபை ஆற்றிவரும் அப்போஸ்தலிக்கப் பணிகளையும், உயர்ந்த திட்டங்களையும் குறித்து சிந்தித்து வரும் இந்நாட்களில், உலகிற்கும் திரு அவைக்கும் தொடர்ந்து ஆற்றவேண்டிய பணிகளை நினைவில்கொண்டு, தங்கள் விவாதங்களை மேற்கொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கடந்தவற்றிற்குரிய மதிப்புடன் புதிய சவால்களை ஏற்றுக்கொண்டவர்களாக, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமான நற்செய்தியின் புதிய திராட்சை இரசத்தை மக்களுக்குக் வழங்கும் புதிய வழிகளில் இத்துறவு சபையினர் ஈடுபட அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதன்மையானதாகவும், ஒரே அன்பாகவும் இருக்கும் இயேசுவில் தங்கள் பார்வையை பதித்தவர்களாக, உதவித் தேவைப்படும் மக்களுக்கு பணியாற்றுமாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் மக்களுக்கு மாண்பையும் நம்பிக்கையையும் வழங்கவும் இயேசுவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

இன்றைய உலகில் கைவிடப்பட்ட மக்களுக்கு இறைவனின் அன்பை எடுத்துரைக்க திருஅவை உங்களை உலகிற்கு அனுப்பியுள்ளது எனவும் கூறிய திருத்தந்தை, இத்துறவுசபைக்கு தென் அமெரிக்கா, ஒசியனியா மற்றும் ஆசியாவில் கிடைத்துவரும் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை புது நம்பிக்கைகளை தருவதாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ இளையோர் நன்முறையில் தயாரிக்கப்படுதல் பற்றியும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, மனித குல மதிப்பீடுகளிலும், வாழ்வு மற்றும் வரலாறு கண்ணோட்டத்திலும் அவர்கள்  பயிற்சி அளிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

இத்துறவு சபை உறுப்பினர்களின் பொது வாழ்வு, உண்மையான சகோதரத்துவத்தால் அடையாளப்படுத்தப்பட்டதாய், பன்மைத்தன்மையையும், ஒவ்வொருவரின் தனிப்பட்டக் கொடைகளின் மதிப்பையும் வரவேற்பதாக இருக்கட்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.