2017-09-16 17:02:00

இர்மா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தலத்திருஅவை நிதி திரட்டல்


செப்.16,2017. அண்மை இர்மா புயலால் தாக்கப்பட்ட கரீபியன் தீவுகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கிழக்குப்பகுதிகளுக்கு உதவும் நோக்கத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அனைவரும் நிதி திரட்டுமாறு அமெரிக்க ஆயர் பேரவைத்தலைவர் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

இம்மாதத்தின் 23 மற்றும் 24ம் தேதிகளில் அமெரிக்காவின் அனைத்து ஆயர்களும் நிதித்திரட்டல்களை மேற்கொண்டு, இர்மா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என தன் கடிதத்தில் விண்ணப்பித்துள்ளார், ஆயர் பேரவைத்தலைவர், கர்தினால் டேனியல் தி நார்தோ.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவர்கள் முழுமையாக தங்களை கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவிகளும், ஆதரவும், நீண்ட காலத்திற்கு தேவைப்படும் என ஆயர்களுக்கு அனுப்பியுள்ள தன் கடிதத்தில் கூறியுள்ள ஆயர் பேரவைத்தலைவர், அவசர கால நிதி திரட்டல் ஒன்று தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவுகளின் போது அருளுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உரிய ஒரு பாதையாகச்செயல்படும் திரு அவை, தற்போது தானும் இப்புயலால் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், திரு அவையின் பல்வேறு கோவில்களும் கட்டிடங்களும் சேதமாகியுள்ளதாகவும் தன் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார் கர்தினால் தி நார்தோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.