2017-09-18 16:33:00

ஜப்பானிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் செய்தி


செப்.18,2017. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ஒரே குடும்பமாக இணைக்கும் பணி, வறியோருக்கு உதவி, கலாச்சார முன்னேற்றம், பலசமய உரையாடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் ஈடுபாட்டுடன் செயலாற்றிவரும் ஜப்பான் திருஅவையை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், ஜப்பான் நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ளதையொட்டி, அந்நாட்டு ஆயர்களுக்கு சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடு, தலத்திருஅவைக்கு வழங்கியுள்ள எண்ணற்ற மறைசாட்சிகளின் வரலாற்றைக் குறிப்பிட்டு, தற்போது, அத்திருஅவை ஆற்றிவரும் சிறப்புப்பணிகளையும் பாராட்டியுள்ளார்.

உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்க இயேசு விடுத்த அழைப்பிற்கு ஏற்றவகையில் செயலாற்றிவரும் ஜப்பானியத் திருஅவையில், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலைப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை.

மணமுறிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இளையோரிடையே நிகழும் தற்கொலைகள், மத உணர்வின்றி வாழ்தல், வருமானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற பல்வேறு சூழல்களிடையே, திருஅவை, நற்செய்தியை அறிவித்து, வாழ்ந்துகாட்ட வேண்டிய தேவை உள்ளது என்பதை திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சவால்கள் நிறைந்த ஜப்பானிய சூழலில், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியருக்கு அளிக்கப்படவேண்டிய பயிற்சி குறித்தும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.