2017-09-18 15:49:00

பாசமுள்ள பார்வையில் - கணவரைக் காப்பாற்றத் துணிந்த தாய்


2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் பாராமதி நகரில் நடந்த, மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில், 60 வயதைத் தாண்டிய, மூத்த குடிமக்களுக்கான பிரிவில், மூன்று கி.மீ. தூரம் ஓடி, முதல் பரிசை தட்டிச் சென்றார், 66 வயது நிரம்பிய லதா பாக்வான் கரே (Lata Bhagwan Kare). அவர் வயதை ஒட்டிய பலரும், பந்தயத்தில் ஓடுவதற்குரிய உடைகளை அணிந்திருந்த நிலையில், லதா அவர்கள், காலில் செருப்புகூட அணியாமல், தலையில் முக்காடுடன், மராத்தியப் பாரம்பரிய ஒன்பது முழ பாரம்பரியச் சேலையை உடுத்தியபடி, பந்தயத் தூரத்தை முதலில் கடந்து பரிசுத் தொகையைப் பெற்றார். இவர் தன் வாழ்நாளில் வேகமாகக்கூட நடந்ததில்லையாம். அப்படியிருந்தும் வெறும் காலோடு இந்த ஏழைத்தாய் மாரத்தானில் ஓடுவதற்குத் துணிந்ததே, நோயுற்றிருந்த தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். லதா அவர்கள் சொன்னார் : “என் கணவரைக் காப்பாற்ற, இதற்குமேல், எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று. புல்டானா மாவட்டத்தில் பிம்ப்லி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. இவரும் இவரது கணவரும் கடினமாக உழைத்து, தங்களின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். மகள்களின் திருமணங்களுக்குப் பின், இத்தம்பதியர், வயல்களில் தினமும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் லதாவின் கணவர் கடுமையாய் நோயால் பாதிக்கப்பட்டார். கையில் பணமில்லை. தனது கிராமத்திற்கு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்றார் லதா. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக, பாராமதிக்குப் போகச் சொன்னார்கள். தன் கரங்களிலே தன் கணவர் இறப்பதைப் பார்க்க விரும்பாத லதா, கண்ணீருடன் தனக்குத் தெரிந்தவர்களிடம் கெஞ்சி சிறிது பணம் சேர்த்தார். பாராமதியில், மருத்துவர்கள் மேலும் சில பரிசோதனைகள் செய்யச் சொன்னார்கள். அதற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாயக் கூலி வேலை மூலம், தினம், நூறு ரூபாய் சம்பாதிக்கும் இவரிடம், பணம் இல்லை. பணத்திற்கு எங்குச் செல்வது? யாரிடம் கையேந்துவது? கனத்த இதயத்துடன் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த லதா தம்பதியருக்கு, பசி வயிற்றைக் கிள்ளி எடுக்க, சாப்பிடுவதற்கு ஆளுக்கொரு சம்சா பலகாரம் வாங்கினர். அது சுற்றப்பட்டிருந்த துண்டு தினத்தாளில் மாரத்தான் பற்றி தடித்த எழுத்துக்களில் வெளியாகியிருந்ததை வாசித்தார் லதா. தனது கணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். இவரின் பரிதாப நிலையைப் பாரத்து, மாரத்தானில் ஓடுவதற்கு நிர்வாகிகள் முதலில் அனுமதிக்கவில்லை. லதா கண்ணீருடன் கெஞ்சி அனுமதி பெற்றார். கணவரின் மீதுள்ள அன்பால் வெறுங்காலோடு ஓடி பரிசுப் பணத்தையும் பெற்றார் லதா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.