2017-09-19 16:20:00

குடும்பத்தை மையப்படுத்தி திருத்தந்தையின் Motu Proprio


செப்.19,2017. திருமணம், மற்றும் குடும்ப இயலுக்கென புதியதோர் அமைப்பினை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Motu Proprio, அதாவது, 'தன் சுயவிருப்பத்தின் பேரில்', திருத்தந்தை, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள வழிமுறை மடலில், 1981ம் ஆண்டு திருத்தந்தை, புனித 2ம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்ட திருப்பீட நிறுவனம் ஒன்றுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, திருமணம் மற்றும் குடும்பம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய குடும்பங்கள், உலகின் உண்மை நிலைகளை எதிர்கொள்வதற்கு, அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறைந்துவருவது குறித்து, தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வாழ்வில் தோன்றும் பிரச்சனைகள், உண்மை நிலைகள், ஆகியவை, ஞானம், மற்றும் அன்பின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

உரோம் நகரின் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக இயங்கவுள்ள இந்த அமைப்பு, கத்தோலிக்கக் கல்வி பேராயம், வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீடக் கழகம், வாழ்வு, குடும்பம், பொதுநிலையினர் திருப்பீட அவை போன்றவற்றுடன் கொண்டுள்ள தொடர்பின் வழியாக, திருப்பீடத்துடன் இணைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம், குடும்ப இயல் இவற்றில் மேல்படிப்புக்களை மேற்கொள்வோருக்கு இந்த அமைப்பு உதவி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.