2017-09-22 16:29:00

பழங்குடியினர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்


செப்.22,2017. மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் பழங்குடியினரைக் குறித்து உலக அவைகளில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களில், பழங்குடியினர் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் விண்ணப்பித்தார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் இவான் யுர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், பழங்குடியினரை மையப்படுத்தி, இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களின் வளங்களை அபகரிப்பதற்கு, சுரங்கங்களை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பழங்குடியினரின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் குறிப்பிட்டார்.

பழங்குடியினரின் வாழ்வாதாரங்களையும், அவர்களது கலாச்சாரம், வாழ்வு முறை ஆகியவற்றையும் குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, பழங்குடியினரின் சம்மதத்தை பெறுவதில்லை என்று, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

பழங்குடியினரின் வாழ்வைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீது அந்நிய கலாச்சாரத்தைத் திணிப்பது தவறு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.