2017-09-22 16:28:00

பாசமுள்ள பார்வையில்...: ஒருவர் ஒருவரைச் சார்ந்தது உலகு


அந்த தாயின் பெயர் தமயந்தி. அவருக்கு ஒரே மகன். பிள்ளையை, பொன்னைப்போல் போற்றி பாதுகாத்தார் அத்தாய். வெள்ளிக்கிழமைதோறும் மாலையில், அவன் பள்ளி விட்டு வந்தவுடன், கை பிடித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவன் கைகளில் கொஞ்சம் சில்லறைக் காசுகளைக் கொடுத்து, கோவிலுக்கு வெளியே தர்மம் கேட்டு அமர்ந்திருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொல்வார், அத்தாய். இது சில ஆண்டுகளாகவே பழக்கமாக இருந்தது. ஒரு நாள் அச்சிறுவன், தாயிடம் கேட்டான், 'அம்மா! வேலைச் செய்யாமல், இப்படியே அமர்ந்திருப்பவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? நம்மிடமும் காசில்லை, நாமும் ஏழைதான். இவ்வளவு குறைவாகக் காசு கொடுப்பதால், அவர்களின் ஏழ்மை நீங்கி விடவாப்போகிறது?' என்று. தாய் கூறினார், 'மகனே, அவர்களின் ஏழ்மையை நீக்கவேண்டும் என்பதற்காக உன்னிடம் காசு கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொல்லவில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உன்னில் வளர வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன். போதிய வசதியில்லாத நாம், உன் மாமாவின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது, உனக்குத் தெரியும்தானே. அதேப்போல், நமக்கும் பிறருக்கு உதவும் கடமை உள்ளது. ஏனென்றால், ஒருவர் ஒருவரைச் சார்ந்தே இந்த உலகம் உள்ளது. இதை எப்போதும் நினைவில் கொள்’ என்று.

படிப்பறிவு இல்லையெனினும், அம்மாவின் அந்த பரந்த அறிவு குறித்து உள்ளம் பூரித்தான் மகன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.