2017-09-22 16:11:00

மெக்சிகோ, கரீபியன் மக்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


செப்.22,2017. பெரு நாட்டு அரசுத்தலைவர், Pedro Pablo Kuczynski அவர்களையும், அவரது துணைவியார் மற்றும் உயர் அரசு அதிகாரிகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், அரசுத்தலைவர் Kuczynski அவர்கள், ஏனைய திருப்பீட உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, நில நடுக்கங்களாலும், சூறாவளிகளாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ, மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய நாடுகளுக்காக செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இன்ஸ்டாகிராம் வழியே விண்ணப்பித்துள்ளார்.

"துன்பங்கள் நிறைந்த இக்காலங்களில், மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகளில் வாழும் அன்பு மக்களுக்காக இறைவனிடம் செபிக்கிறோம். குவாதலூப்பே அன்னை மரியா அவர்களுக்கு அருகே இருந்து ஆறுதல் தருவாராக" என்ற சொற்கள் திருத்தந்தையின் செய்தியாக வெளியாயின.

மேலும், தங்களிடம் உள்ள ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழித்துவிடுவதாக ஒரு சில உலகத் தலைவர்கள் கூறிவரும் வேளையில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, ஆயுதங்களைக் களையுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

"அமைதிக்காகவும், ஆயுதக்களைவுக்காகவும் நான் விண்ணப்பிக்கிறேன். வன்முறையால் காயப்பட்டுள்ள இவ்வுலகில், மக்களிடையே உடன்பிறந்த உணர்வு தேவை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ், செப்டம்பர் 21 சிறப்பிக்கப்பட்ட உலக அமைதி நாளன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.