2017-09-23 16:48:00

'Trappists' துறவு சபையின் உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை


செப்.23,2017. இன்றைய உலகின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், செபம், ஆழ்நிலை தியானம், பிறரன்பில் ஈடுபாடு போன்ற செயல்பாடுகளின் சாட்சிகளாகச் செயல்பட, 'Trappists' என்றழைக்கப்படும் துறவு சபையின் உறுப்பினர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கடுமையான ஒழுங்குமுறை விதிகளைக் கடைபிடிக்கும் Cistercian துறவு சபை எனவும் அழைக்கப்படும் Trappists துறவு சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளைத் தேடுதல், செபித்தல், மற்றும் பிறரன்புப்பணிகளின் உன்னத சாட்சிகளாக அவர்கள் திகழ்வதற்கு தான் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.

'இறைவனின் இல்லத்தில் யாருக்கும் தொல்லையில்லை, சோகமுமில்லை' என்று புனித பெனடிக்ட் கூறிய சொற்களை மேற்கோள் காட்டிப் பேசியத் திருத்தந்தை, பிறரன்பின் ஈடுபாடு என்பது, Trappist துறவு சபையினர், தங்கள் சபையின் தனிவரத்திற்கு விசுவாசமாக இருப்பதன் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இறைப்புகழுக்கும், மனிதர்களின் நன்மைக்கும் என்ற கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி வரும் இத்துறவு சபை, திருஅவைக்கும், சமூகத்திற்கும், உழைப்பதற்குரிய புதிய வாய்ப்புக்களை கண்டுகொள்வதாக என்று வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.