2017-09-23 17:34:00

மத சிறுபான்மையினரை காக்க திருப்பீடத்தின் 7 ஆலோசனைகள்


செப்.23,2017. மோதல்களின்போது, சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஐ.நா. அவைக்கூட்டத்தில் உரையாற்றினார், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர், பால் ரிச்சர்ட் காலகர்.

அண்மைக்காலங்களில், சில நாடுகளில், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும், சிறைவைக்கப்பட்டும், அடிமைகளாக நடத்தப்பட்டும், துன்பங்கள் தொடர்வதாக உரைத்த பேராயர் காலகர்அவர்கள், மத சிறுபான்மையினரைக் காப்பாற்றவேண்டியது, அனைத்துலக சமுதாயத்தின் கடமைகளுள் முக்கியமானதாக உள்ளது என்றார்.

சிறுபான்மையினருக்கு எதிரான சித்ரவதைகளை தடுப்பது மட்டுமல்ல, அத்தகைய போக்கிற்கான காரணங்களை ஆராயவேண்டியதும் அவசியம் என, ஐ.நா. பொது அவைக்கூட்டத்தில் அழைப்பு விடுத்தார், திருப்பீட அதிகாரி பேராயர் காலகர்.

மத்தியக் கிழக்குப் பகுதியில், ISIS தீவிரவாதிகள், சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் காலகர் அவர்கள், மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், உலகின் 27 நாடுகள் ஈடுபட்டு வருவது குறித்து, அமெரிக்க ஐக்கிய நாடு வெளியிட்ட அறிக்கையையும், மத சுதந்திரத்துக்கு எதிராக 38 நாடுகளில் இடம்பெறும் விதி மீறல்கள் குறித்து Aid to the Church in Need என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையையும் மேற்கோள் காட்டினார்.

உலகில் கிறிஸ்தவர்களே அதிக அளவில் மத அடிப்படையிலான சித்ரவதைகளை அனுபவிப்பதாக உரைத்த பேராயர் காலகர் அவர்கள், ஐரோப்பாவின் சில இடங்களில் யூத விரோத தாக்குதல்கள் இடம்பெற்றது, மற்றும், மத அடிப்படைவாதிகளால் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது போன்றவை குறித்து, திருப்பீடத்தின் கவலையையும் வெளியிட்டார்.

மத சிறுபான்மையினர் காக்கப்படுவதற்கு ஏழு வழிமுறைகளையும் முன்வைத்தார் பேராயர் காலகர். போதிய நடவடிக்கைகள், பாகுபாடற்ற தன்மை, மத குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு, மத விரோதப்போக்குகளை மதத்தலைவர்கள் கண்டனம் செய்தல், மதங்களிடையே உரையாடல் ஊக்குவிக்கப்படல், மத தீவிரவாதங்களை தடுக்கும் நோக்கத்தில் கல்வி வழங்கப்படல், மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, நிதியும் ஆயதங்களும் செல்வதைத் தடுத்தல், போன்ற வழிமுறைகளை முன்வைத்தார். பேராயர் காலகர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.