2017-09-25 16:31:00

பிறரன்பையும் விசுவாசத்தையும் அதிகரிக்க உதவும் இறையாறுதல்


செப்.,25,2017. இறைவன் நம்மை சந்திக்க வரும்போது நமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் வழங்குவார், ஏனெனில் கண்ணீரால் விதைத்த ஒவ்வொருவருக்கும் ஆன்மீக ஆறுதலை இறைவனே வழங்குகின்றார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வின் பலவீனமான நேரங்களிலும், உறுதியான நேரங்களிலும், இறைவன் தன் இருப்பை நமக்கு எப்போதும் உணர்த்தி, ஆன்மீக ஆறுதலை வழங்கி, நம்மை மகிழ்ச்சியால் நிரப்புகிறார் என்றார்.

தாழ்ச்சி என்ற நற்குணத்துடனும் நம்பிக்கையுடனும், இறைவனுடன் ஆன சந்திப்பிற்கு காத்திருப்பது என்பது, சாம்பலுக்குள் மறைந்திருக்கும் கனல் போன்றது எனவும் தன் மறையுரையில் உரைத்த திருத்தந்தை, இயேசுவின் சந்திப்பில் வாழாத கிறிஸ்தவர், என்ன செய்வது என்று தெரியாமல், சேமிப்புக் கிடங்கில் முடங்கிப்போனவர் ஆவார் எனவும் கூறினார்.

இறைவன் வழங்கும் ஆறுதல், நம் பிறரன்பையும் விசுவாசத்தையும் அதிகரிக்கவும், நம் பாவங்களுக்காக அழவும் உதவுவதுடன், இறைவனின் அமைதியையும் நம் ஆன்மாவிற்கு வழங்குகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.