2017-09-26 15:34:00

எல்லா மனிதருக்கும் எதிரான அனைத்துப் இனப்பாகுபாடுகளை...


செப்.26,2017. இக்காலத்தில் வளர்ந்துவரும் அனைத்து விதமான இனப்பாகுபாடு, இனவெறி, அந்நியர் மீதான வெறுப்பு, சகிப்பற்றதன்மை ஆகியவற்றை அகற்றுவதற்கு, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், தனித்துவத்தையும், வரலாற்றையும், மரபுகளையும் அங்கீகரித்து மதிப்பது மிகவும் இன்றியமையாதது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளில் இனப்பாகுபாட்டின் தாக்கம் குறித்து, ஐ.நா.வின் 36வது மனித உரிமைகள் அவையில் இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறினார்.

அனைத்து மனிதச் செயல்பாடுகளிலும் பெண்களின் பங்கு மறுக்க முடியாதது என்றும், பெண்களும் சிறுமிகளும் எதிர்நோக்கும் பல்வேறு துன்பங்கள் களையப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், எல்லா மனிதருக்கும் எதிரான அனைத்துப் இனப்பாகுபாடுகளை திருப்பீடம் வன்மையாய்க் கண்டிக்கின்றது என்றும் கூறினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில், குடும்பமும், கல்வி நிறுவனங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும், மக்கள் மீதுள்ள முற்சார்பு எண்ணத்தைக் களைவதற்கு, ஒவ்வொரு மனிதரும் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் அளிக்கப்பட வேண்டும் என்றும் உரையாற்றினார், பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.