2017-09-28 18:25:00

காஙகோ மக்களுக்காக ஐ.நா.வில் குரலெழுப்பிய திருப்பீடம்


செப்.,28,2017. காங்கோ ஜனநாயக குடியரசில் சீர்கேடடைந்துவரும், சமூக, பொருளாதார, மற்றும், மனிதாபிமான நிலைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக ஐ.நா அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயல்படும் பேராயர் Jurkovič  அவர்கள், மனித உரிமைகள் அவையின் 36வது கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தபடசம் 3000 பேர் வரை உயிரிழந்துள்ளதையும்,  10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடிபெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்த பேராயர், மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் தொடர்வதை சுட்டிக்காட்டினார்.

வன்முறைகளால் பெருமளவில் மக்கள், குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும், ஊனமுற்றோரும்,  உணவு மற்றும் மருந்துப் பொருடகள் பற்றாக்குறை, தொற்று நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த பேராயர் Jurkovič அவர்கள்,  அரசு துருப்புக்களால் ஆற்றப்படும் விதி மீறல்கள் கணக்கில் எடுக்கப்படாமை, நீதித்துறையின் சக்தியற்ற நிலை, குற்றம்புரிவோர் தண்டனையின்றி செல்லுதல் போன்றவை, வன்முறை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கின்றன எனவும் குற்றம் சாட்டினார்.

தங்கள் மனச்சான்றிற்கும், பொறுப்புணர்வுகளுக்கும் இயைந்தவகையில், காங்கோ குடியரசின் ஆட்சியாளர்களும், அனைத்துலக தலைவர்களும் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்நாட்டு மக்களை காப்பற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருப்பீட அதிகாரி, பேராயர் Jurkovič.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.